வெள்ளி, 18 ஜூன், 2010

பிரம்ம சமாஜத்தின் சமய, சமூக சீர்திருத்தப் பணிகள்

19 ஆம் நூற்றாண்டில் பாரதம் பாருக்குள்ளே நல்ல நாடாக பாமர ஜாதியையும் படித்த ஜாதியாக்கி, சாஸ்திரம் சொல்லும் சாதிகளை சரித்திரத்தில் நீக்கி,“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” எனப் பெண்ணியம் பேணி பெருமை கொண்டது.
இத்தகு பெருமையால் இந்தியா அறியப்படுகின்றதென்றால், அதற்கு இந்திய தேசத்தின் தாய் நாகரிகமான இந்து நாகரிகம் பெற்ற சீர்திருத்தமே எனலாம். அதனைப் பெற்றுத்தந்தவர் இராஜாராம்மோகன்ராய் என நாம் பெருமை கொள்வதை விட, இந்திய மறுமலர்ச்சியின் தந்தை, இந்துமத சீர்திருத்தத்தின் முன்னோடி என இந்திய வரலாறே பெருமை கொள்வது இந்துமத சீர்திருத்தத்திற்கு கிடைத்த ஓர் கிரீடம்.
சமயம் என்பது ஓர் இனத்தின் இடதுவிழி எனின் சமூகம் என்பது வலம். இவையிரண்டும் இல்லையெனின் அந்த இனத்தின் நாகரிக வாழ்வே இருண்டு விடும். இவையிரண்டையும் ஒளி பெறச் செய்வதற்கு காலம் தோறும் கடவுள் அவதரிக்கின்றார் சீர்திருத்த வாதியாக.
இந்து சமூகத்தை ஒளிபெற்றிடச் செய்த சீர்திருத்த வாதிகளுள் இராஜாராம்மோகன்ராய் முன்னோடியாவார். இவர் தனிமனிதனாக மட்டுமன்றி 1828 இல் “பிரம்ம சமாஜம்” என்னும் சீர்திருத்த இயக்கம் ஒன்றினைத் தோற்றுவித்து அதனூடாகவும் இந்துமதத்தை உலக மதமாக நிறுத்தியவர்.
“பிரம்ம சமாஜம் என்ற சொற்தொடர் “பரம்பொருள் வழிபாட்டுச் சங்கம்” என்ற பொருளினைத் தருவதாகும் உபநிடதங்களிலே மிக ஈடுபாடு கெண்ட ராம் மோகனார் அவைகளிலே பரம் பொருளைக்குறிக்கும் பிரம்மம் என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்தார்.”
என ஆய்வறிஞர் பொ.சு.மணி அவர்கள் தந்துள்ள விளக்கம் மேற்படி கருத்தை அரண் செய்வதாகும்.
இராஜாராம்மோகன்ராய் தன் சிர்திருத்த சிந்தனைகளை சமய, சமூக, கல்விப் புலங்களில் பட்டை தீட்டியவர். இதனால் இம் மூன்று துறைகளும் முன்னணி பெற்றன. இங்கு பிரம்ம சமாயத்தின் சமய சமூகப் பணிகளை ஒப்பாய்வு செய்வதே நோக்கமெனலம்.
நவீன இந்து சமய சீர்திருத்த இயக்கங்களுள் பிரம்ம சமாஜம் இந்து சமயத்தினதும்,சமூகத்தினதும் வளர்ச்சிக்குப் பல ஆக்கபூர்வமான பணிகளை ஆற்றியது. ராஜாராம் மோகன்ராய் இந்து சமயக் கருத்துக்களுடன் மேல்நாட்டுக் கருத்துக்கள், மேலைத்தேய கல்வியியல் சிந்தனைகள் முதலானவற்றையும் அடிப்படையாகக் கொண்டு தனது சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்டார். அதாவது
“இந்தியப் பண்பாட்டுத் தளத்தில் நின்று அனைத்துலகப் பண்பாட்டுத் தளத்தை நோக்கி விரிந்து செல்வதாக - இந்திய தேசியத்துக்குள் சர்வ தேசியத்தை நாடுவதாகத் திகழ்வதை அவதானிக்கலாம்.”
(சுப்பிரமணியன்.நா,இந்தியச் சிந்தனை மரபு,பக்-148)

இதனால் இச்சமாஜத்தின் சீர்திருத்தக் கொள்கை:
“மாற்றான் தோட்டத்து மல்லிகையிலும் மணமுண்டு.”
என்பதாக அமைகின்றது. எனவேதான் பிரம்ம சமாஜத்தின் கொள்ளைகளும் பணிகளும் மேல் நாட்டவர்களாலும் வரவேற்கப்பட்டன. சான்றாக, யுடிடிந புசநபழசநை என்ற கிறிஸ்துவ தலைமைக்குரு ஒருவர் பிரெஞ்சு மொழியில் எழுதிய குறிப்பொன்றில்
“...அறிவிலோ தத்துவ ஞானத்திலோ அவர் (ராம்மோகனர்) குறைபாடுடையவரல்லர்… அளவையியல் அடிப்படையில் சிந்திக்கும் முறைகளில் அவர் தனிச் சிறப்புடையவராகத் தோன்றுகின்றார்… இந்துக்களின் அறிவுநலமிக்க தத்துவக் கோட்பாடுகளுக்கு இணையான கருத்துக்களை ஐறோப்பிய நூல்கள் ஒன்றிலும் காணமுடியவில்லை என்று அவர் அறுதியிட்டு உறுதியாகக் கூறுகின்றார்.”
எனக் குறிப்பிடுகின்றார்.
சமயப் பணிகளில் சளைக்காத சபை பிரம்ம சமாயம் என்பதற்கு வரலாறே தக்க சாட்சி. சமயத்திற்கும் சமூகத்திற்கும் உள்ள உறவு நிலையைப் பகுத்தறிவு நோக்கில் தெளிந்து கொண்டவர் இவர். சமுதாயத்தின் ஒழுங்கு முறைகளைக் காக்கவும் ஒழுங்கு படுத்தவும் கண்டறியப்பட்ட ஒரு சாதனமே மதம் எனக் கருதி மதப்பணிகளை ஆற்றினார்.
பிரம்ம சமாஜம் இந்து சமயத்தில் காலங்காலமாக நிலவிய சீர்கேடுகளை நீக்குவதன் மூலமே பிறசமயங்களின் பரம்பலைத் தடுப்பதுடன், இந்து சமயத்தினையும் நெறிப்படுத்த முடியுமெனக் கொண்டு அதற்கேற்ப பணிகளை முன்னெடுத்தது. இந்துசமய இலக்கியங்களுள் உபநிடதங்களே உண்மையானவை, புனிதமானவை எனும் கொள்கையுடையவராக மோகன்ராய் விளங்கினார். இதனால் உபநிடதங்கள் கூறும் பரம்பொருளாகிய பிரம்மத்தை மையமாகக் கொண்டு தமது இயக்கத்திற்கும் பிரம சமாஜம் எனப் பெயரிட்டார். இது வேதங்களுக்கு முதன்மையளிக்கும். தயானந்த சரஸ்வதியின் கொள்கைக்கு முரணானது. இச்சமாஜத்தின் பிரர்த்தனை முறை: காயத்திரி மந்திரத்துடன் ஆரம்பித்தல் ,இடையில் உபநிடத சுலேகத்தோடு கூறுதல் ,முகாநிர்வாண தந்திர சுலோகத்தோடு முடிவடைதல். என்ற வகையில் அமைந்தது. மேலும் உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்ற பிரம சூத்திரம், பகவத்கீதை, அவற்றுக்கான சங்கரர், இராமானுஷர், மத்துவர் என்போரின் உரைகள் என்பனவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக பிரம சமாஜத்தின் ஆன்மீகச் செயற்பாடுகள் அமைந்தன.
இராஜாராம் மோகன்ராய் இளவயதிலிருந்தே உபநிடத சிந்தனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தார். இந்நிலைப்பாடு இந்துசமயத்தில் அதுவரை காலமும் வேரூன்றியிருந்த திருவுருவ வழிபாடு, பல கடவுள் வழிபாடு என்பவற்றை அவர் வெறுப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. ராஜாராம் மோகன்ராய் சமூகத்திலிருந்து இச்சீர்கேடுகளை அகற்றுவதற்கு உபநிடதங்களையே அடிப்படையாகக் கொண்டார். உபநிடதம், அத்வைதம் என்பன வலியுறுத்துகின்ற ஒருமை வாதக் கொள்கையை ஆதாரமாகக் கொண்டு பரம்பொருள் ஒன்றே என்னும் கொள்கையை வலியுறுத்தினார்.
வடிவமற்றதும் சகலவற்றிட்கும் அடிப்படையானதும் புலன்களாலும் மனத்தாலும் அறியமுடியாததும் அறிவுக்கும் அறிவாய் நிலைத்து நிற்பதுமான பிரம்மம் என்ற தத்துவ நிலையில் உலகின் அனைத்துச்சமயங்களின் கடவுட் கொள்கைக்குமான அடிப்படை அமைந்துள்ளதாக சான்றுகளுடன் நிரூபித்தார். அவர் எழுதிய வேதாந்தம் தொடர்பான நூல்களிலும் பிரம்மசபதி (பிரம்மத்தைப் பற்றிய ஆராய்ச்சி) என்ற தலைப்பில் வங்க மெழியிலும், டீசயாயஅயயெiஉயட ஆயபயணiநெ என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்ட இதழ்களிலும் இந்த பிரமத்துவம் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
அதுபோலவே உபநிடதங்கள் பரம்பொருளாகிய நிர்குணப் பிரம்மத்தை உருவமற்றதெனக் கூறுவதன் வாயிலாக பிரம்ம சமாஜமும் உருவமற்ற கடவுளையே வழிபடவேண்டும் என்று பிரச்சாரம் செய்தது. மோகன்ராய் “விக்கிரக ஆராதனை மறுப்பு” எனும் நூலில் விக்கிரக ஆராதனைக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
“விக்கிரக வழிபாடு மனித இன வரலாற்றில் இடைக்காலத்தில் புகுந்த இயற்கைக்கு மாறான பயில்நிலைகள்” என அந் நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும்
“…உயிருள்ள அல்லது உயிரற்ற பொருட்கள் எதுவாக இருந்தாலும் இன்று இருப்பதாகவோ, இனிமேல் தோன்றக் கூடியதாகவோ இருந்தாலும் அவற்றை வழிபாட்டுக்குரிய பொருளாக ஏற்றுக் கொள்ளக் கூடாது…”
எனப் பிரம்ம சபையின் அறநிலையப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இராஜராம் மோகன்ராய் கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயக்கொள்கைகளை நன்கு அறிந்திருந்தமையால் அவற்றுள் உள்ள பகுத்தறிவு வாத சிந்தையினை அடிப்படையாகக் கொண்டு இந்து சமயத்தை சீர்திருத்த எண்ணினார். எனினும் கிறிஸ்தவ சமயத்தவரின் தீவிர சமயப் பிரச்சாரத்தினையும், இந்துக்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்படுவதனையும் கண்டிப்பவராகவும் விளங்கினார் இவரால் வெளியிடப்பட்ட பல நூல்கள் கிறிஸ்தவர்களின் செயற்பாடுகளைக் கண்டிக்கின்ற வகையில் காணப்படுகின்றன. அவற்றுள் யேசுநாதரின் உயிர், கிறிஸ்தவருக்கு முறையீடு ,மனிதாயதம் ,சம்வாத கௌமுதி போன்றவற்றை சிறப்பாகக் கூறலாம். இவர் தன்னுடைய உரையாடல் நடையில் அமைந்த சம்வாத கௌமுதி என்னும் நூலில் இந்துசமய உண்மைகளை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். இவர் உலகத்தில் காணப்படும் அனைத்து சமயங்களையும் இணைத்து பொது சமயம் என்னும் கொள்கையை வெளியிட்டமை அவரது சமய சமரச உணர்வை காட்டுவதாக உள்ளது.

பிரம்ம சமாஜத்தினுடைய சமயம் சார்ந்த மற்றொரு பணியாக சமயக் கண்டனம் உள்ளது. சமயங்களின் பொருத்தமற்ற செயற்பாடுகளைக் கண்டிக்கும் வகையில் இப்பணி அமைந்தது. எனவே பிரம்ம சமாஜத்தின் சமய கண்டனத்தை:
இந்து சமயக் கண்டனம்
பிற சமயக் கண்டனம்
என்னும் அடிப்படையில் இனங்காண்கின்றனர். ராஜாராம் மோகன்ராய் இந்து சமயத்தில் நிலவிய:
கன்மம் மறுபிறப்பு நம்பிக்கை
பல தெய்வ வழிபாடு, விக்கிரக ஆராதனை
அளவற்ற, பொருளற்ற சடங்குகள்
பூர்வ ஜென்ம நம்பிக்கை
மூடநம்பிக்கை
போன்றவற்றைப் பகுத்தறிவுக் கொள்கைக்குப் பொருந்தாதவையெனக் கண்டித்தார். அவர் தனது தற் சரிதம் என்னும் நூலில்:
‘‘நான் மேற்கொண்ட கருத்து மாறுபாடுகளிலிருந்து இந்து
சமயத்தை எதிர்க்கவில்லை. உண்மைக்கு மாறாக
நெறிக்குப் புறம்பாகக் காட்ட எழுந்த முயற்சிகளையே
எதிர்த்தேன். ’’

என்று கூறுகின்றார். அவர் இந்துசமயக் கடவுட் கோட்பாட்டின் சிறந்த அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சமயம் ஒன்றினையும், கடவுள் வழிபாட்டினையும் நிறுவுவதற்கு முனைந்தார்.
ராஜாராம் மோகன்ராயின் மறைவிற்குப் பின்பு தலைமைப் பொறுப்பை ஏற்ற தேபேந்திரநாத்தாகூர் சமாஜத்தின் சமயக்கொள்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்தினார். அவற்றுள்:
1. ஸ்மிருதிகள் மற்றும் மகாபாரதத்தின் சில பகுதிகளை ஏற்றுக்கொண்டமை
2. சமய அனுட்டானங்களைத் திருத்தி ‘அனுஷ்டான பக்தி’ எனும் நூலை இயற்றியமை
3. பிரம்மமே பரம்பொருள் எனும் கொள்கையை மறுத்தமை
4. காளி பூசை, பூணூல் அணிதல், சாதிப்பாகுபாடு என்பவற்றை ஒதுக்கியமை
5. கிறிஸ்தவர்களுடன் கொண்டிருந்த உறவுகளைத் துண்டித்தமை
போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதனைப் போலவே பிரம்ம சமாஜத்தின் தலைமைப் பொறுப்பினை கொசுப்சந்திரசென் ஏற்றதன் பின்பு மேற் கூறப்பட்ட செயற்பாடுகளில் பெருமாற்றங்கள் ஏற்பட்டன. அதாவது கிறிஸ்தவ சமயத்துடன் அதிகம் தொடர்பு கொண்ட வகையில் சமாஜத்தின் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
பிரம்ம சமாஜத்தின் சீர்திருத்தப் பணிகளுள் சமூகம் சார்ந்த பணிகளும் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. ராஜாராம் மோகன்ராய் ஒரு விமர்சகராக மட்டுமன்றி தன் சீர்திருத்த சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுத்தவராகவும் காணப்பட்டார். இந்திய சமுதாயத்தில் புரையோடியிருந்த
1. பெண் சிசுக் கொலை
2. பலதார மணம்
3. பால்ய விவாகம்
4. உடன் கட்டை ஏறுதல்
5. விதவா விவாகம் மறுப்பு
6. பெண்களுக்கு கல்வி மறுப்பு
7. பெண்களுக்கு சொத்துரிமை மறுப்பு
8. தீண்டாமை
9. மூடநம்பிக்கைகள்
முதலான சீர்கேடுகளை சமூகத்தில் இருந்து வேரறுப்பதில் பெரும் பங்காற்றினார். ஆங்கிலேய ஆட்சியாளரும் இத்தகைய தீமைகளை அகற்றுவதில் அக்கறையின்றி இருந்தமை மறைமுகமாக அவற்றை ஆதரிப்பதாகவே அமைந்தது. இந்நிலையில் தனியொரு மனிதனாக நின்று தன்னுடைய பணிகளை மோகன்ராய் முன்னெடுத்தார். இந்துசமய சட்ட நூல்களினை ஆதாரம் காட்டி மேற்கூறிய சீர்கேடுகள் சமய அடிப்படையற்றவை என்பதனை வலியுறுத்தினார். இவர் 1822ல் வெளியிட்ட பெண்கள் சொத்துரிமைகளில் நவீன ஆக்கிரமிப்பு என்னும் நூலில் ஆண்களின் சொத்துரிமை தொடர்பான ஆதிக்கம் பெண்கள் சொத்துரிமை தொடர்பான சீர்கேடுகளுக்கு அடிப்படையான காரணம் என்பதனை விளக்கினார்.
இராஜராம் மோகன்ராயினுடைய சமூகச் சீர்திருத்தப் பணிகளுள் மிகமுக்கியமானது பெண்களைப் பெரிதும் அடிமைப்படுத்திய உடன்கட்டை ஏறுதல் என்னும் சதி வழக்கத்தினை சமுதாயத்தில் இருந்து போக்குவதற்கு மேற்கொண்ட முயற்சியாகும். 1815ம் ஆண்டு தொடக்கம் 1825ம் ஆண்ட வரையான கால எல்லையில் கிட்டதட்ட 8000 இந்துப் பெண்கள் உடன்கட்டை ஏற்றப்பட்டதாக அரசாங்கப் பதிவுகள் வெளிப்படுத்தின. இச்சதி வழக்கானது அதிகாமான இந்துப் பெண்கள் கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்களைத் தழுவுவதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்துவிட்டது.
இச்சீர்கேடு தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காகவும், இவ்வழக்கத்தின் கொடுமையை தெளிவுபடுத்துவதற்காகவும் மக்களிடையே தீவிரமான பிரசாரத்தினை மேற்கொண்டார். இதற்காக 1818ம் தொடக்கம் 1829ம் வருடம் வரையான காலப்பகதியில் மூன்று துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டார். இந்து சமய நூல்களினை ஆதாரங்காட்டி இச்சதி வழக்கத்தின் பகுத்தறிவுக்கு பொருத்தமற்ற தன்மையை விளக்கினார். ராஜாராம் மோன்ராயின் அயராத முயற்சியினால் ஆங்கிலேய அரசாங்கம் சட்டரீதியாக உடன்கட்டை ஏறுவதனை தடைசெய்தது. பெண்டிங் பெருமகனாரின் ஆட்சிக் காலத்தின் போது 1829ம் வருடத்தில் ‘உடன்கட்டை ஏறுதல் தடைச்சட்டம்’ கெண்டுவரப்பட்டது. பெண்ணை பலாத்காரமாக உடன்கட்டை ஏற்றுவோர்கள் மட்டுமன்றி: அதற்கு துணைபோவோரும் தண்டனைக்குரியவர்கள் என்று அச்சட்டம் குறிப்பிடுகின்றது. இவற்றினைத்தவிர பெண் சிசுக்களை கொலை செய்தல், பால்யவிவாகம் போன்ற செயல்களும் தண்டனைக்குரிய குற்றங்களென இந்தச்சட்டம் கூறுகின்றது.
பிரம்ம சமாஜமும் தனது செயற்பாட்டினூடகவும் பெண்ணடிமை நிலைமையைப் போக்கி சமத்துவத்தினை வழங்கியது. 1827ல் இந்நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘பிரம சமாஜ சட்டம்’ பெண்களுக்கு எதிராக நடந்தேறிய அடக்கு முறைகளைத் தகர்த்து; அவர்களுக்கு சமூகத்தில் சம அந்தஸ்தினை வழங்கும் வகையில் அமைந்தது. இந்நிறுவனம்;
பால்ய விவாகம், பலதார மணம் என்பன தடைசெய்யப்படவேண்டும்
விதவைகளை மறுமணம் செய்வதை சமூகம் அனுமதிக்க வேண்டும்
சமூக வாழ்வியலில் பெண்களை பங்கு கொள்ளச் செய்ய வேண்டும்
விழிப்புணர்வுக் கூட்டங்களில் பெண்களை அதிகளவில் பங்கு கொள்ளச் செய்தல் வேண்டும்
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளையும் மேற்கொண்டது. பெண்கள் தொடர்பான சமத்துவம், சுகந்திரம், உரிமைகள் என்பன குடும்பம், சமூகம், தேசம் என்று அனைத்து நிலைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டு மெனக் கோரியது. இவ்வாறு பெண் விடுதலைக்காக குரல் கொடுத்தமையினாலேயே அறிஞர்களினால் மோகன்ராய்:
“பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெண் நிலை வாதியான ஆண்”
என அழைக்கப்பட்டார். இது இராஜாராம்மோகன்ராயின் சிந்தனைகளுக்குச் சூட்டிய மகுடம் என்று கொள்ளலாம்.
மேலும் சாதி என்ற சமூக விரோத சித்தாந்தத்தை அடியோடு அகற்றியமை சாதியின் பேரால் வேதிகள் செய்யும் போலிகளை வெளிச்சப்படுத்தி சமூகத்திற்கு ஒளியூட்டியவர். பிறப்பினால் எவர்க்கும் பெருமை வராதப்பா சிறப்பு வேண்டுமெனில் நல்ல செய்கை வேண்டும் என்பதைச் செய்து காட்டினார்.
ராம்மோகனர் தம்வாழ்நாளின் இறுதியில் இங்கிலாந்து சென்று அங்கேயே 1833 இல் காலமானார். அவருக்குப் பின்னர் பிரம்ம சமாஜம் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகியது. அவர் கொண்டிருந்த இந்து மதப் பாரம்பரிய ஈடுபாடு, அனைத்துலக சமயப்பார்வை, சமூக-அரசியல் ஈடுபாடு ஆகிய ஒவ்வொன்றும் தனித்தனியாக முனைப்புப் பெற்ற சூழ்நிலைகளில் அந்த நிறுவனம் முறையே ஆதிப் பிரம்ம சமாஜம், இந்தியப் பிரம்ம சமாஜம், சாதாரண பிரம்ம சமாஜம் என
மூன்றாகப் பிளவு பட்டது. ஆதிப் பிரம்ம சமாஜம் இந்தியப் பண்பை முதன்மைப் படுத்தியது. இதற்கு மகரிÑp தேவேந்திரநாத தாகூர் தலைமை தாங்கினார். பிரம்ம சமாஜத்தின் இந்துமத அடிப்படைத் தொடர்பை விலக்கி அதனை ஓர் தனி அமைப்பாகக் காட்ட விழைந்தவர் கேசவசந்திரசேனர். இதன் விழைவே இந்தியப் பிரம்ம சமாஜம் எனலாம். ராம்மோகனர் முன்வைத்த சமூக-அரசியல் கருத்துக்களில்- குறிப்பாகத் தாழ்த்தப்பட்டோர் நலன் முதலியவற்றுள் ஈடுபாடு காட்டிய பண்டித சிவநாதசாஸ்திரி என்பார் சாதரண பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தார்.
இத்தகு வரலாற்றுப் போக்கினைக் கொண்ட பிரம்ம சமாஜம் சமூக முன்னேற்றத்திற்குத் தொடுத்த பணிகள் இன்றும் நம்மிடையே நிழலாடுகின்றன. சான்றாக
கல்கத்தாவில் உள்ள இராஜாராம்மோகன்ராய் அறக்கட்டளை மூலம் தமிழ்நாட்டில் உள்ள பொது நூலகத்துறையை கணினி
மயமாக்குவதற்கு ரூ. 1.5 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம்
4000 நூலகங்கள் கணினி மயமாக்கப்பட்டமை.

போன்ற செயற்பாடுகளினைக் குறிப்பிட முடியும்.
தொகுத்தும் வகுத்தும் நோக்கும் போது புதியகால இந்தியச் சிந்தனை மரபுக்கு வித்திட்ட இராஜாராம்மோகன்ராய் தனிமனிதனாகவும், சமூக இயக்கமாகவும் செயற்பட்டதன் விழைவே இந்து சமய, சமூக சீர்திருத்தம் எனலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக