வெள்ளி, 18 ஜூன், 2010

சோழகாலக் கட்டிடக்கலை

கி.பி 850 இல் விஜயாலய சோழன் தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றி சோழப்பேரரசை நிறுவினான். இவனால் நிறுவப்பட்ட இப்பேரரசு 13ம் நூற்றாண்டுவரை சுமார் 400 ஆண்டுகள் நிலைபெற்றது. வடக்கில் கங்கையையும் தெற்கில் இலங்கையையும் வென்ற சோழர்கள் தென்கிழக்காசியாவில் கடாரத்தையும் வென்று கடல்கடந்த நாடுகளிலெல்லாம் செல்வாக்குச் செலுத்தலாயினர். ஆட்சிச் சிறப்பாலும், கடல் கடந்த வாணிபத்தாலும் ஈட்டிய பெரும்பொருள் கொண்டு கோயில் திருப்பணிகளைச் செய்து சோழர்கள் பெரும்புகழீட்டினார்.. இவரிகளுடைய ஆட்சிக்காலமே அரசியல் வரலாற்றிலும், கலைவரலாற்றிலும் பொற்காலமாகத் திகழ்கிறது.

சோழகாலக் கலைவரலாற்றைப் பொதுவாக முற்காலச் சோழர்கலை, இடைக்காலச் சோழர்கலை, பிற்காலச் சோழர்கலை, என மூன்று பிரிவாகப் பிரித்து நோக்குவர். அவை வருமாறு:
1)விஜயாலயன் காலம் முதல் உத்தம சோழன் காலம்வரையுள்ள பகுதி (கி.பி. 850 – கி.பி. – 985)
2)முதலாம் இராஜராஜன் காலம் முதல் அதிராஜேந்திரன் காலம்வரையுள்ள பகுதி (கி.பி. 985 – கி.பி. 1070)
3)முதற்குலோத்துங்கன் காலம் முதல் மூன்றாம் இராஜேந்திரன் காலம் வரையுள்ள பகுதி (கி.பி. 1070 –கி.பி. 1270)
(ஏகாம்பரநாதன் 1984: 41)
முற்காலச் சோழர் காலக் கோயில்கள் சோழர் வரலாற்றை வகை செய்யுமாற்றை நோக்குங்கால் ஆரம்பகாலச் சோழர்கள் பல்லவமன்னர்கள். கையாண்ட கட்டிட மரபையே பின்பற்றிக் கட்டிடங்களை அமைத்தனர். சோழர் எழுச்சியின் ஆரம்ப காலத்தில், முதல் ஒரு நூற்றாண்டு காலம் வரை கட்டப்பட்ட கட்டிடங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. திருக்கட்டளை என்னும் இடத்திலுள்ள சுந்தரேஸ்வரர் கோயில், நார்த்தாமலையில் உள்ள விஜயாலயன் கோயில், கொடும்பாளூரிலுள்ள மூவர்கோயில் என்பன குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் திருக்கட்டளையிலும், நார்த்தாமலையிலும் உள்ளவை ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுவதால் அவையே சோழர்காலக் கட்டிடங்களில் காலத்தால் முந்தியவை எனலாம். இவை தவிர கடம்பர்மலை, குளத்தூர், கண்ணனூர்,கலியபட்டி, திருப்பூர், பனங்குடி போன்ற இடங்களிலும் இக்காலக் கோயில்களைக் காணமுடியும். இவற்றுடன் ஓரளவு பெரிய கட்டிடமான ஸ்ரீனிவாசநல்லூரிலுள்ள குரங்கநாதர் கோயிலும் 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்படதாகக் கருதப்படுகிறது.
இன்று நிலைத்திருக்கும் ஆரம்ப சோழர் காலக் கோயில்கள் அனைத்தும் முழுமையாகக் கருங்கற்களினால் ஆனவை. இவற்றிலே முந்தைய பல்லவர் காலக் கோயில்களின் அம்சங்கள் காணப்பட்டாலும்இ அவற்றைவிட இச் சோழர் காலக் கோயில்கள் திருத்தமாகக் கட்டப்பட்டுள்ளன. இது பல்லவர் காலத்துக்குப் பின்னர் கற் கட்டிடங்களைக் கட்டுவதில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
10ம் நூற்றாண்டுவரை இவர்கள் கட்டிய ஏராளமான கோயில்கள் சிறியனவாகவே உள்ளன. இவற்றுட் பெரும்பாலனவற்றைப் புதுக்கோட்டை மாவட்டத்திற் காணமுடிகிறது. பல்லவர்பாணி படிப்படியாக மாற்றிச் சோழர்பாணியாக வடிவெடுப்பதை இக்கோயில்களிற் காணலாம். இதற்கு நல்ல உதாரணமாக நார்த்தமலையிலுள்ள விஜயாலய சோழீச்வரத்தைக் குறிப்பிடலாம்.

மேற்குநோக்கி அமைந்த இக்கோயில் ஆரம்பகாலச் சோழர்பாணிக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகும். இதன் அமைப்பு அசாதாரணமானது. சதுரமான பிராகாரத்தின் உள்ளே வட்டமான கருப்பக்கிருகம் காணப்படுகிறது. கருப்பக்கிருகத்துக்கும் பிராகாரத்துக்கும் மேலேயுள்ள விமானம் போகப்போக அளவிற் குறைந்திருக்கும் நான்கு அடுக்குகளைக் கொண்டுள்ளது. முதல் மூன்று மாடிகளும் சதுரமாகவும், மேலேயுள்ளமாடி வட்டமாகவும் உள்ளன. இவை எல்லாவற்றுக்கும் மேலே குமிழ்போன்ற சிகரமும் அதற்குமேலே வட்டமான கலசலமும் காணப்படுகின்றன. (நீலகண்ட சாஸ்திரி 1966:547)

கோயிலின் முன், மூடு மண்டபம் ஒன்றுண்டு. சோழர்காலத்திற்கே தனித்துவமான சுவர்களும் அவற்றில் அழகிய வேலைப்பாடுகளும் காணப்படுகின்றன. கூரையின் உட்புறத்திற் சிறுகோயில்கள் (பஞ்சரங்கள்) உண்டு. முன்னுள்ள மண்டபத்தின் தூண்கள் பல்லவர்பாணியிலேயே உள்ளன. ஒருகாலின்மேல் மறுகாலை வைத்த தோற்றமுடைய இரு தூவாரபாலகர்கள் நுழைவாயிலில் உள்ளனர். பிரதானமான கோயிலைச் சுற்றி ஏழு துணைக்கோயில்கள் உள்ளன. ஆரம்பகாலச் சோழர் கலைப்பாணியில் இது முக்கிய அம்சமாகும். கண்ணனூரில் முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்ட பாலசுப்பிரமணியர் கோயிலும், பெரிதும் இந்த அமைப்பையே கொண்டுள்ளது. கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரர் கோயில் அழகான சிறிய கோயிலாகும். இதுவும் மேற்படி பல்லவ பாணியையே பெரிதும் ஒத்திருக்கிறது.

கட்டிடகலை வளர்ச்சியின் அடுத்த வளர்ச்சியை சிறீநிவாச நல்லூரில் உள்ள கோரங்கநாதர் கோயிலிற் காணமுடிகிறது. இது முதலாம் பராந்தகன் ஆட்சிக்காலத்தெழுந்ததென்பர். ஆனால் பாலசுப்பிரமணியம் இது ஆதித்த சோழன் காலத்திற்குரியதென்பர். (பாலசுப்பிரமணியம் 1966:61) நாகசாமியும் இதே கருத்தைக் கொண்டுள்ளார். (1976:63) இக்கோயிலுள்ள கருவறை, அந்தராளம், அர்த்த மண்டபம் ஆகிய உறுப்புக்கள் ஒரே காலத்திற் கட்டப்பட்டு இன்றும் சிதைவுறாமல் உள்ளன. அழவுக்கு மீறிய அலங்கார வேலைப்பாடுகளின்றி மிகவும் எளிமையான இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. தூணின் மேலேயுள்ள அகன்ற பகுதியும், அதற்குமேலேயுள்ள அகன்ற பகுதியும், அதற்குமேலேயுள்ள பலகைப் பகுதியும், பல்லவபாணியிலிருந்து வேறுபட்டு காணப்படுகின்றன.

பழுவூரைத்தலைநகராகக்கொண்டு ஆட்சிபுரிந்த பழுவேட்டரையர்கள் பல கோயில்களைக் கட்டினர். மேலைப்பழுவூர் சுந்தரேஸ்வரர் கோயில், கீழைப்பழுவ+ர், திருவாலந்துறை. மகாதேவர் கோயில். இடைப்பழுவூர் அகத்தீஸ்வரர் கோயில் என்பன இவற்றுள் முக்கியமானவை. இம்மூன்றினுள் அகத்தீஸ்வரம் மிகவும் சிறப்புவாய்ந்தது. ஒரே திருச்சுற்றில் இரண்டு விமானங்கள் அமைந்துள்ளன. ஓன்று, ‘வடவாயில் ஸ்ரீகோயில்’ என்றும், மற்றது ‘ தென்வாயில் ஸ்ரீகோயில்’ என்றும் பெயர் பெறுகின்றன. இரண்டு கோயில்களும் தனிக்கற்களாலான கற்றளிகளாகும். ஒன்று சதுரமான சிகரத்தையும், மற்றது, வட்டமான சிகரத்தையும் கொண்டுள்ளன. கோபுரத்தை நோக்கியுள்ள
முகமண்டபம் மிகவும் எழிலாக அமைந்துள்ளது.
இருக்குவேளிர்கள் சோழர்களின் நெருங்கிய உறவினர்கள், இவர்கள் கொடும்பாள+ரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சிபுரிந்தனர். இவர்களுள் ஒருவன் விக்கிரமகேசரிபூதி என்பவன். இவன் விக்கிரமகேசரீச்சுரம் எனும் கோயிலைக் கட்டினான். ஒரே திருச்சுற்றில் மூன்று விமானங்களையுடையது இக்கோயில். இவற்றை ‘விமானத்திரயம்’ எனக் கல்வெட்டுக் கூறுகின்றது. இம்மூன்று விமானங்களில் ஒன்று இப்பொழுது இடிந்து காணப்படுகிறது. மூன்று விமானங்களையும் சதுரமான சிகரத்தையும் கொண்டுள்ளன. ‘மூவர் கோயில்’ என்றும் அழைக்கப்படும் இதனுடன் காளாமுகர்களின் ஆசிரியரான மல்லிகார்சுனரின் குருமடம் ஒன்றும் இணைந்து காணப்படுகிறது.
பராந்தக சோழன் காலத்திலும் பல கற்கோயில்கள் கட்டப்பட்டன. இவை ஆதித்த சோழன் காலமரபைப் பின்பற்றியே எழுந்தன. காளஹஸ்திக்கு அருகில் தொண்டைமாநாடு என்ற இடத்தில் பராந்தகனின் தந்தையாகிய ஆதித்த சோழன் இறந்தபோது ஒருஷபள்ளிப்படையை’ பராந்தகன் நிறுவினான். பள்ளிப்படை என்பது இறந்தவர் நினைவாக எடுக்கப்படும் கோயிலாகும். பராந்தகன் காலக் கோயில்களில் புள்ளமங்கையில் அமைந்துள்ளபசுபதி கோயில் சிறப்புடையது. இது ‘பிரமபுரீஸ்வரர்’ கோயில் என்றும் திருவாலந்துறை ;மகாதேவர் கோயில்’ என்றும் அழைக்கப்பட்டது.

திருவாவடுதுறை, திருவாமாத்தூர், நங்கவரம், திருமால்புரம், எறும்பூர், காட்டுமன்னார்குடி முதலிய ஊர்களில் உள்ள கோயில்களும் பராந்தகசோழன் காத்தனவாகும். பராந்தக சோழனுக்குப் பின்னர் கண்டராதித்தர், அரிஞ்சயன் சுந்தரசோழன், உத்தமசோழன் முதலியோர் காலங்களிலும் கட்டப்பட்ட கோயில்கள் ஆதித்த சோழனது கலைமரபினை ஒத்தனவேயாகும்.
கண்டராதித்தரின் தேவியாரும், உத்தம சோழனின் தாயாருமான செம்பியன் மாதேவியார், பாடல் பெற்ற பல தலங்களைக் கற்றளிகளாக மாற்றியமைத்தார். வடக்கே காஞ்சிபுரத்திலிருந்து, தெற்கே நாகபட்டனம் வரை இவ்வம்மையார் கோயில்களை அமைந்தார். இவர் கட்டுவித்த கோயில்கள் செம்பியன்மாதேவி, கோனேரிராசபுரம், ஆடுதுறை, திருக்கோடிகாவில், குற்றலாம், திருநாரையூர், கண்டராதித்தம், விருத்தாசலம், திருவெண்ணை நல்லூர் ஆகிய இடங்களில் உள்ளன. கண்டராதித்தர் தேவரின் நினைவாக ஒரு பள்ளிப்படையையும் இவர் எடுப்பித்தார்.

செம்பியன் மாதேவியார் காலத்துக்கு முன்பு மூன்று அல்லது ஐந்தாக இருந்த தேவகோஷ்டங்கள் இக்காலத்தில் ஒன்பது முதல் பதினாறுவரை விரிவாக்கப்பட்டன.

இடைக்காலச் சோழர் காலக் கோயில்கள் சோழர் கலைப்பாணியின் சிகரமெனலாம்
சோழ மன்னர்களுள் முதலாம் இராஜராஜன் தொடக்கம் முதலாம் குலோத்துங்கன் வரையில் ஆட்சிபுரிந்த காலப்பகுதியே தென்னக வரலாற்றில் காலச்சுவடுகளை காலமாகா வண்ணம் வகைசெய்த பெருமைக்கரியது. முதலாம் இராஜராஜனும் அவனுடைய மகன் முதலாம் இராஜேந்திரனும் பற்பல நாடுகளைக் கைப்பற்றிச் சோழ சாமராச்சியத்துடன் இணைத்தனர். ஆதனாற்பெற்ற பொன்னையும் பொருளையும் கொண்டு ஈடிணையற்ற பெரும் கோயில்களைக் கட்டினர். இவர்களின் கீழிருந்த சிற்றரசர்களும் குறுநில மன்னர்களும் கூடப் பற்பல கோயில்களை அமைக்கத் துணைநின்றனர்.

இராஜராஜன் காலம்வரை சிறிய கோயில்களே கட்டப்பட்டன. இவன் ஆட்சிபீடமேறிய பின்னரும் ஆரம்பத்தில் சிறிய கோயில்களே அமைக்கப்பட்டன. சோழ மன்னர்கள் எடுப்பித்த கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தவை முதலாம் இராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலும். முதலாம் இராஜேந்திதர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழேச்வரக் கோயிலுமாகும். இவ்விரு கோயில்களும் பெரும்பாலும் ஒரேவிதமான அமைப்புடையனவாகும்.
சோழப் பேரரசின் மாபெரும் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தவன் இராஜராஜ சோழன். இவன் சுந்தரசோழன் என வழங்கும் இரண்டாம் பராந்தக சோழனின் இளைய மகன். ஐப்பசிச் சதய நாளில் பிறந்தவன்; இயற்பெயர் அருண்மொழித்தேவன். பட்டப்பெயர் இராசகேசரி. தில்லைவாழ் அந்தணர்களால் இராசராசன் என்று பெயர் சூட்டப்பட்டவன். சிவபாதசேகரன், திருநீற்றுச்சோழன் முதலிய வேறு பெயர்களையும் உடைய தமிழகத்தை ஆட்சிபுரிந்த ஈடிணையில்லா மன்னனாவான். அவன் காலத்தில் ஆட்சி புரிந்த எந்த இந்திய மன்னரும் அவனுக்கு இணையாக மாட்டார்கள். வீரமும் பக்திப்பெருக்கும், கலையார்வமும் கொண்ட இவன் தன் மூச்சென தமிழையும் உயிரென சைவத்தையும் போற்றியவன் சோழர் காலத்திற்கே பொற்கால மகுடம் சூட்டியவன். இம்மன்னன் சிவபெருமான் மீது கொண்ட அதிகப் பற்றுதலின் காரணமாக தஞ்சாவூரில் மிகப்பெரிய கோயில் ஒன்றைக் கட்ட விரும்பினான். மேலும் இக்கோயில் தமிழர்களின் கட்டிடக் கலைக்கும் மிகப்பெரும் சாதனையாக இருக்க வேண்டுமென்றும் விரும்பினான். அவனது விருப்பப்படி இந்தக் கோயில் கட்டுவதற்குத் தேவையான கற்கள் பெரும்பான்மையாக அவன் ஆளுகைக்குட்பட்ட இடங்களுக்கு வெளியில் இருந்துதான் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இக்கோயில் கோபுரம் தரைத்தளத்திலிருந்து 216 அடி உயரம் உடையது. இக்கோயில் கோபுரம் கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயில் கோபுரத்தின் உச்சியில் உள்ள பிரம்ம மந்திரக்கல் எனும் ஒரே கல்லிலான வட்ட வடிவமான கல் சுமார் 80 டன் அளவுடையது. இக்கோயிலின் மூலவரான பிருகதீசுவரர் (பெருவுடையார்) லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். இந்த லிங்கத்தின் உயரம் 13 அடி. ஆவுடை எனும் லிங்கத்தின் கீழ்ப்பகுதியான வட்டவடிவமான பகுதியின் சுற்றளவு 54 அடியாக இருக்கிறது. இந்த லிங்கம் மத்தியப்பிரதேச மாநிலம் நர்மதை ஆற்றங்கரையிலிருந்த ஒரு மலையில் இருந்து கல் எடுத்து வந்து செய்யப்பட்டது என்கிறார்கள். இவ்வளவு பெரிய லிங்கம் வேறு எங்கும் இல்லை. இங்கு கோயிலின் முன்புறமுள்ள நந்தியும் மிகப்பெரிய அளவுடையது. இது 9 அடி நீளமும், 6 அடி அகலமும், 12 அடி உயரமும் கொண்டது. இது போன்ற நந்தி உருவம் வேறு எங்கும் இல்லை. கருவூரார் எனும் சித்தரின் அறிவுரையின்படி 10 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்தக் கோயில் முதலில் இராஜராஜ சோழன் பெயராலேயே இராஜராஜேஸ்வரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் நாயக்க மன்னர் காலத்தில் பெருவுடையார் கோயில் என்று அழைக்கப்பட்டது. அதன் பின்னர் 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களின் ஆளுமைக்குள் வந்த போது பிருகதீசுவரம் என்று பெயர் மாற்றமடைந்தது. இந்தக் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த சிறப்பான கோயில் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.





தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் வளாகத்தில் பெரிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பெருவுடையார் கோயில் தவிர, வடமேற்கு மூலையில் சுப்பிரமணிய சுவாமி கோயிலும்,வடகிழக்குப் பகுதியில் வராகியம்மன் கோயில்,சண்டிகேசுவரர் கோயில், கணபதி கோயில், நடராஜர் கோயில் போன்றவைகளும், முன்பகுதியில் பெரிய நந்தி கோயிலும், கருவூரார் கோயிலும் அமைந்துள்ளன. கோயில் வளாகத்தில் சுற்றுப்புறச் சுவரின் உட்புறத்தில் உள்ள சுற்று மண்டபத்தில் 63 நாயன்மார்கள் சிலைகள மற்றும் பல வடிவங்களிலான 108 சிவலிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் கட்டப்பட்டபோதிருந்த காலம்இ சோழராட்சியின் பொற்காலமாகும். தமிழ்நாடு முழுவதும் ஒரே குடைக்கீழ் இருந்ததுடன்இ எல்லைக்கப்பாலும் பல இடங்கள் சோழப் பேரரசின் கீழ் இருந்ததுடன்இ பெருமளவு வருவாயும் கிடைத்துவந்தது. பெருமளவு ஆள்பலமும்இ அரசனின் சிவபக்தியோடு கூடிய ஆளுமையும்இ இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டிமுடிப்பதற்குத் துணையாக இருந்தது. சோழப் பேரரசின் விரிந்துவரும் பரப்பிற்கும் வளர்ந்து வரும் வசதிக்கும் ஓங்கிவரும் அதிகாரத்திற்கும் பொருத்தமாகக் கட்டடக் கலையில் தமிழருடைய சாதனையாக இந்தக் கோயிலை இராஜராஜன் கட்ட நினைத்தான் போலும் முக்கியமான கட்டடம் 150 அடி நீளம் இருக்கிறது.
இவற்றினுடைய பெருமிதத் தோற்றத்தையும் ஒருங்கிணைந்த திட்டத்தின் எளிமையான இயல்பையும் பாராட்டாமல் இருக்கமுடியாது. துணைச் சார்ந்த(யுஒயைட)மண்டபங்களும் விமானமும் அர்த்த மண்டபமும் மகாமண்டபமும் பெரிய நந்தியும் அவற்றிற்கேற்ற பொருத்தமான அளவுகளையுடைய ஒரு சுற்றுச் சுவருக்குள் அடங்கியிருக்கின்றன. இச்சுவரில் கிழக்கே ஒரு கோபுரம் இருக்கிறது. மதிலை ஒட்டி உள்பக்கமாக பல தூண்களுள்ள ஒரு நீண்ட மண்டபம் செல்லுகிறது. இது 35 உட்கோயில்களை இணைக்கிறது. நான்கு திக்குகளிலும் பல இடைவெளிகளுக்கு நடுவே கேந்திரமான இடங்களில் இந்த உட்கோயில்கள் கட்டப் பெற்றிருக்கின்றன. இரண்டாவது வெளிப் பிரகாரத்தின் வாயிலாக இருந்த இடத்தில் முன் பக்கத்தில் இரண்டாவது கோபுரம் இருக்கிறது.
முக்கிய விமானம் உத்தம வகையச் சார்ந்தது; ஆதலால் இது மிகச் சிறந்தது. இதைஇ தமிழில் மாடக்கோயில் என்றும் சொல்வார்கள். இவ்வகைக்கு முதலாவது உதாரணம் தட்சிணமேரு-கோரங்கநாதர். இது பக்கவாட்டில் 99 அடி உள்ள சதுர அடித்தளத்தில் மீது அமைந்தது. படுக்கையான பகுதிஇ நீண்டு துருத்திக் கொண்டிருக்கும். ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. நடுவேயுள்ள பகுதி மற்ற பகுதிகளை விடப் பெரியது. தர மட்டத்துக்குக் கீழே இருக்கும் தளத்திலிருந்து சிகரம் வரை குடாவும் மாடமும் மாறி மாறிக் காணப்படுகின்றன. சுவரில் பதித்த தூண்கள்இ பீடத்தை அழகுபடுத்துகின்ற்ன.
கங்கைகொண்ட சோழபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டாண்டின் நடுவில் இதனை முதலாம் ராஜேந்திர சோழன் தனது தலைநகரமாக ஆக்கினார். இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.
கோயிலின் அமைப்பு
தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோயில் தஞ்சைக் கோயில் பிரதானமான அல்லது மிக முக்கியமான இயல்புகளை ஆனால் அந்த இயல்புகளை வேறு ஒரு வகை உணர்ச்சியுடன் வெளிப்படுத்துகிறது. தஞ்சைப் பெரிய கோயிலில் ஆண்மையின் மிடுக்கும் வீரமும் பொங்கி வழிகிறது என்றால்இ கங்கை கொண்ட சோழபுரக் கோயிலில் பெண்மையின் மென்மையும் அழகும் உள்ளத்தைக் கவருகிறது. தஞ்சைக் கோயில் வீரத்தன்மைகளும்இ ஆண்களுக்குரிய கம்பீரமும் கங்கை கொண்டை சோழபுரத்தில் இல்லைஇ ஆனால் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு என்று தனித்த சில கவர்ச்சிகள் உள்ளன.
இந்த வேறுபாட்டுக்கு ஒரு காரணம்இ விமானத்தின் அமைப்பில் நேர் கோடுகளுக்குப் பதிலாக நெளிவுகள் கையாளப்பட்டிருப்பது தான். பொதுவாக தஞ்சாவூரைவிட இங்கு பொலிவுபடுத்துவதில் அக்கறை காட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கொள்ளைக்காரர்களால் ஒரு கட்டிடத்துக்குச் சேதம் ஏற்படுவது போலஇ இந்தக் கால பொறியியல் வல்லுநர்களால் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்குப் பெருங்கேடு உண்டாக்கப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் இது கோயில்களாகவும் விளங்கியது. அதே நேரத்தில் வல்லமை பொருந்திய பெரிய கோட்டையாகவும் சிறந்திருந்தது. கோயிலில் தென்மேற்கு மூலையில் பெரியதொரு அரண் இருக்கிறது. மேற்கே ஒரு சிறு அரண் இருக்கிறது; 340 அடி நீளமும் 100 அடி அகலமும் கொண்டுள்ள இக்கோயிலில் 175 அடியும் 95 அடியும் நீள அகலங்கள் உடைய மண்டபமும் ஒவ்வொரு பக்கத்திலும் 100 அடி உடைய சதுரமான கர்ப்பக்கிரகமும் உள்ளன. மண்டபத்தையும் கர்ப்பக்கிரகத்தையும் இணைக்க ஒர் இடைவழி இருக்கிறது. தஞ்சாவூரில் போலஇ இங்கேயும் இந்த இடைவெளியின் மூலைகளில் வடக்குஇ தெற்கு வாயில்கள் அழகான வேலைப்பாடுள்ள கதவுகளுடன்இ கண்ணையும் கருத்தையும் கவரும் துவார பாலகர்களுடன்இ படிக்கட்டுகளுடன் மிளிர்கின்றன.
மெய் சிலிர்க்கக்கூடிய வகையில் கட்டடக் கலையையும் சிற்பக்கலையையும் பிரம்மாண்டமான உருவத்தில் வடித்துஇ கவர்ச்சியான பெரியதொரு கோட்டை வாயில்போல்இ மண்டபத்தின் கிழக்கு மூலையில் பிரதான வாயில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பெரிய மண்டபத்தில் 140 தூண்களும்இ 4 அடி உயரமுள்ள மேடைமீதுஇ அகலப்பட எட்டு வரிசைகளில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. மண்டபத்தின் நடுவேஇ தரை மட்டத்தில் ஓர் அகன்ற பாதை போடப்பட்டிருக்கிறது. அதுஇ தொடர்ந்துஇ மண்டபம் முழுவதும் உள்ள உட்சுவரைச் சுற்றி ஒரு குறுகலான பாதை வழியாகச் செல்லுகிறது. அதன் மீது 18 அடி உயரமுள்ள தட்டையான கூரைஇ எல்லா பக்கங்களிலும் 16 அடி அகலத்திற்குப் பரவியிருக்கிறது.
மற்றொரு கோடியில் இறங்கி ஏறாமல் செய்யக்கூடிய இடைவெளி இருப்பது இந்த மண்டப அமைப்பில் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. அதன் மேல்பகுதிஇ மண்டபத்தின் மேலே கூரை எழுப்பிஇ அதற்கும் விமனத்திற்கும்இடையே இரண்டு அடுக்குக் கட்டிடம் போலத் தெரிகிறது. இடைவெளிக்குள் இரண்டு வரிசைகளில் சதுரமான பெரிய(மேடை தாங்கித்) தூண்கள்இ வரிசைக்கு நான்காகஇ உள்ளனஇ இந்தத் தூண்கள் சம இடைவெளிகளில் நிறுத்தப்பட்டிருப்பதால் மண்டபத்திற்கு மேலும் அழகு ஊட்டுகின்றன. இவற்றுக்குப் பின்னால் கர்ப்பக்கிரகம் கம்பீரமாகத் திகழ்கிறது.
விமானத்தின் உயரம் 160 அடி. எனவேஇ இது தஞ்சாவூர் அளவு உயரமாக இல்லை. ஆனால் இங்கும்இ விமானம் அந்தக் கோயில் முழுவதையும் கவரும்படியும் வழியில் செல்பவர் அனைவர் மனத்திலும் பதியும்படியும் அமைந்திருக்கிறது இங்கு ஏராளமான சிறுகோயில்கள் இருந்தன என்பது அண்மையில் நடந்த அகழ்வாராய்ச்சியால் தெரிகிறது. இந்த உட்கோயில்கள் இன்னும் ஆராயப்படவேண்டிய நிலையிலேயே உள்ளன. விமானத்தின் அடித்தளம்இ கர்ப்பக்கிரகத்தின் செங்குத்தான சுவர்கள்இ இவற்றின் உயரம் 35 அடி; தஞ்சாவூரைப் போலஇ இங்கும்இ இந்தச் சுவர்கள் மிகப்பெரிய பிதுக்கத்தால் இரண்டு மாடிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. கிழக்குப் பக்கத்தில் மட்டுமே கதவுகள் உள்ளன. விமானத்தில் எட்டு நிலைகளே உள்ளன; தஞ்சாவூரைப் போல 13 நிலைகள் இல்லை; கட்டிடத்தின் இந்தப் பகுதியில் தான் உள்ளத்தைக் கவரும் அழகுமிகு வளைவுகள் உள்ளன. இவை கட்டட அமைப்பு முறையில் உண்டான மாறுதல்களைச் சுட்டுகின்றன.
இது கட்டடக் கலையின் புதிய தனை எனலாம். கோபுரத்தின் கோணங்களில் உட்குழிவான வரைவுகளிலும் அதன் பக்கங்களிலும் உள்ளே வைத்து மூடப்பட்ட வடிவு விளிம்புகளிலும் நெளிவுக் கோடுகள் போடப்பட்டிருப்பதைக் காணலாம். இவைதான்இ கங்கை கொண்ட சோழபுரக் கோயிலுக்குப் பெண்ணியல்பு ஊட்டுவன. உச்சிப் பகுதியில் இப்படி அழகுபடுத்தப் பட்டிருப்பதுஇ பெண்கள் சீவிச் சிங்காரிப்பது போன்றது. கூடுகளின் நான்கு "சைத்தியங்கள்" பறவைகளின் இறகுகள் போல உள்ளன. ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போதுஇ முற்றிலும் பருவம் அடைந்த பெண்ணின் அழகை சோழர்களின் இந்த அரிய படைப்பில் நுகருகிறோம்.(பெர்சின் பிரவுன்). தஞ்சாவூரைப் போலஇ இங்கும் மூலஸ்தானத்துக்கு அதே நிலையிலும் சம்மந்தத்திலும்இ சண்டிகேஸ்வரர் சந்நிதி இருக்கிறது.
இது தவிரஇ அம்மனுக்கு ஒரு தனிக்கோயில் கட்டப்பட்டிருப்பது கவனத்திற்கு உரியது. இறைவனுடைய கோயிலைவிட அம்மன் கோயில் தான் தஞ்சாவூரைப் பின்பற்றிக் கட்டப்பட்டிருப்பதாகச் சொல்லலாம். மேலும்இ கங்கை கொண்ட சோழ புரத்தில் இறைவன் கோயில்இ அம்மன் கோயில் இரண்டுமே ஒரே காலத்தில் கட்டப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கங்கை கொண்ட சோழபுரத்தில் இறைவன் கோயிலுடன் சேர்ந்து அதே காலத்திலோ அல்லது அதைத் தொடர்ந்து அதற்கு அடுத்தாற் போலோ அம்மன் கோயில் உண்டாயிற்று.
சோழர் கலையின் இறுதிக் காலத்திற்கு முன்னானஇ சில பொதுவான வளர்ச்சிகளுள் முக்கியமாக அம்மனுக்கு தனிக் கோயில் கட்டப்பட்டதை காணலாம். தேவியைஇ தமிழில் அம்மன் என்று சொல்வார்கள். மூலத்தானத்து தெய்வத்தின் மனைவியாகஇ தேவியை(அம்மனை) அந்தக் கோயிலிலேயே வழிபடுவது மரபு. ஆனால் அவளுக்கென்று தனிக் கோயில் கட்டுவது என்ற பழக்கம் முதல் தடவையாக முதலாம் இராஜராஜன் காலத்தில் ஏற்பட்டது. அப்போது 'திருகாமக் கோட்டம்' என்ற பெயர் அம்மன் சன்னதிக்கு வழங்குவதாயிற்று.
கங்கை கொண்ட சோழபுரத்தில் இறைவன் கோயிலுடன் சேர்ந்து அதே காலத்திலோ அல்லது அதைத் தொடர்ந்து அதற்கு அடுத்தாற் போலோ அம்மன் கோயில் உண்டாயிற்று. ஆனால் தஞ்சாவூரில் பெரியநாயகிக்கு உருய கோயில் 13-ம் நூற்றாண்டில் தான் கட்டப்பட்டது. தஞ்ச மாவட்டம்இ கண்டியூர் சிவன் கோயிலில் மங்களாம்பிகை சந்நிதியின் கிழக்குச் சுவரில் முதலாம் இராஜராஜன் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. அதில்இ அவன்க் காலத்திய மற்றொரு அம்மன் கோயில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அக்கல்வெட்டில் சில குறைபாடுகள் இருப்பதால் அதை முக்கியமானதாகக் கொள்வதற்கில்லை.
முதலாம் இராஜராஜன் காலத்தில் 16-ம் ஆட்சி ஆண்டில் எண்ணாயிரத்தில்(தென் ஆற்காடு மாவட்டம்)ஏற்பட்ட கல்வெட்டுஇ உட்கோயில்களின் பட்டியலில் துர்க்கை கோயில் தவிரஇ ஸ்ரீபட்டாரகியர்(பிடாரியார்) என்று அதைக் குறிப்பிட்டிருப்பது தனித்த அம்மன் கோயிலைப் பற்றியே இருக்கக்கூடும்.
பிற்கால ஆட்சிகளில் சோழப்பேரரசின் பகுதிகளிலும் அம்மனுக்குத் தனி கோயில்கள் இருந்ததற்கும் புதுப்பித்து கட்டப்பட்டதற்கும் தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன. மூன்றாம் குலோத்துங்கன் அவனுக்குப் பின் பட்டத்திற்கு வந்த மூன்றாம் இராஜராஜன்இ மூன்றாம் இராஜேந்திரன் ஆகியோர் கல்வெட்டுக்களின் ஆதாரங்களைக் கொண்டு அவருடைய ஆட்சிக் காலங்களில் ஏற்கனவே இருந்த கோயில்களுக்குத் திருக்காமக் கோட்டங்கள் சேர்க்கப்பட்டன அல்லது புதிய கோயில்களில் திருக்காமக் கோட்டங்கள் பெரும் பணச் செலவில் அழகுபட நிர்மாணிக்கப்பட்டன.
அது அந்தக் காலத்திய நடமுறை வழக்கமாக இருந்தது என்றும் உறுதியாகத் தெரிகிறது. திருபுவனத்தில் மூன்றாம் குலோத்துங்கனின் சம்ஸ்கிருதக் கல்வெட்டு இருக்கிறது சிதம்பர நடராஜர் கோயில் தொகுதியிலுள்ள சிவகாம சுந்தரி கோயிலை அவன் அழகுபடச் செய்து புதிதாக தங்கத்தில் 'சுற்றாலை வளைவும்' செய்து வைத்ததாகவும் அவனே அக்கல்வெட்டில் தெரிவித்துள்ளான்.
முதலாவது இராஜராஜன் தஞ்சைப் பெரிய கோயில் மட்டுமன்றி, சித்தூர் இருங்கோளீஸ்வரம், மேற்பாடி அருஞ்சிகையீஸ்வரம், ஆற்றூர் இராஜராஜவிண்ணகரம், ஈழத்தில் பொலனறுவையில் இராஜராஜேஸ்வரம் ஆகிய கோயில்களையும் கட்டினான். முதாலம் இராஜேந்திரனும் கூழம்பந்தல் திருவொற்றியூர் ஆகிய இடங்களிலும் கோயில்களை அமைத்தான்.

முதலாவது இராசாதித்தன், கூவம் எனுமிடத்தில் திரிபுராந்த கேஸ்வரர் கோயிலையும், மன்னார் குடியில் இராஜராஜேஸ்வரத்தையும் இரண்டாம் இராஜேந்திரன் திருக்கோவலூர் திருமால் கோயிலையும், அதிராஜேந்திரன் தென்னார்க்காடு மாவட்டத்தில் சந்திரமௌலீசர் ஆலயத்தையும் அமைத்தனர்.
பிற்காலச் சோழர் கோயில்கள் சோழராட்சியின் பலவீனத்தின் குறிகாட்டியாகும். ஆம் சோழர் வலிகுன்ற அவர்களின் கலைப்படைப்பிலும் வரட்சியினைக் காணமுடியும். ஏனினும் தம் முன்னோர்களின் கலையார்வம் இவர்களிடத்தும் கடும் மழைக்கப்பின் தூறலாய், புயலின் பின்னாய அமைதி நிலையில் காணப்பட்டது எனில் மிகையில்லை.

விஜயாலயன் வழித்தோன்றிய சோழ அரசர்களுக்குப் பின்னர். கீழைச் சாளுக்கியர்- சோழர் வழிவந்த முதலாம் குலோத்துங்கன் கி. பி. 1070இல் ஆட்சிபீட மேறினான். இவனாட்சியிற் கட்டப்பட்ட கோயில்களுள் மேலைக்கடம்பூரிலுள்ள அமிர்தகடேஸ்வரர் கோயிலும். தஞ்சையிலுள்ள சூரியனார். கோயிலும், குமரி மாவட்டத்திலுள்ள சோழீச்வரர் கோயிலும் முக்கியமானவை.

பிற்காலச் சோழர்கள் அமைத்த பெருங்கோயில்களில் ஒன்றாக இரண்டாம் இராஜராஜன் எடுத்த தாராசுரம் சுந்தரேஸ்வரர் ஆலயம் விளங்குகிறது. ஓங்கிய விமானத்துடன் மண்டபம், திருச்சுற்று, பலிபீட என்பனவும் அழகாக அமைந்துள்ளன. சோழர்காலக்கோயில்களுள் உயர்ந்ததாகவும், சிறந்ததாகவும் அமைக்கப்பட்ட கடைசிக் கோயில்கள் திருபுவனத்திலுள்ள கம்பஹரேஸ்வரர் கோயிலாகும். இதனை மூன்றாம் குலோத்துங்கன் கட்டினான். இது தஞ்சைப் பெரிய கோயிலை ஒத்ததெனினும், கங்கை கொண்ட சோழேச்சுவரத்தை விடச் சற்று உயரம் குறைந்ததாகும்.
தென்னகம் அது பொன்னகமாய் மின்னி, தேனகமாய் இனித்து, தென்றலாய்க் குளிர்ந்து, உலகம் வியந்து உவகை கொள்கிறதெனின் அதற்குக் கருத்துச்சூலேற்ற காலக் கிடைக்கையானன சோழர் காலம் காரணம் என்பது நிதர்சனமன யதார்த்தம். எனவே தென்னக கலை வளர்விலும், நிலைப்பிலும் காலத்தால் அழியாத பெருமையும் ஒருமையும் சோழர் காலத்திற்கே எனின் மிகையன்று.



உசாத்துணை நூல்கள்

1)கமலையா க.சி தமிழகக் கலைவரலாறு, சென்னை, (1990).
2)கமலையா க.சி தமிழக நுண்கலைகள், சென்னை, (1978).
3)சதாசிவபண்டாரத்தான் பிற்காலச் சோழர் வரலாறு, அண்ணாமலை,(1974)
4)நாகசாமி இரா. தமிழகக் கோயிற் கலைகள், தமிழ்நாடு அரசு 5)சுந்தரமூர்த்தி தொல்பொருள் ஆய்வுத்துறை,சென்னை,(1976).
6)நீலகண்டசாஸ்திரி தென்னிந்திய வரலாறு, கொழும்பு,(1966)
7)பாலசுப்பிரமணியம் எஸ் ஆர், சோழர் கலைப்பாணி, சென்னை, (1966)
8)வேங்கடசாமி மயிலை. சீனி. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், . சென்னை,(1956)

2 கருத்துகள்: