ஞாயிறு, 27 ஜூன், 2010

அத்வைதம்

இந்துக்கள் தம் சமய வாழ்வியல் உண்மைகளை வெளி உலகக் காட்சிகளையும் மாற்றங்களையும் விபரிப்பதனை விட, அகக் காட்சிகளையும் அணுவுக் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய் உள்ள உண்மைப் பொருளை – ஆத்ம ஞானமாக - ஆத்மீகத் தேடலாக, அலசியும் விவாதித்தும் இந்து மத உண்மைகளை அறிய முயன்றனர். அவ் அறிவு முயற்சியில் சந்தேகத் தன்மையும், ஐயப்பாடும், தோன்றத் தோன்ற உண்மை பற்றிய தெளிவையும் முடிவையும் மேலும் வளர்த்துச் செல்ல இந்துக்கள் முயன்றனர். இதுவே தத்துவ ஞானத்தின் தோற்றுவாய், தத்துவ ஞானத்தின் தாயூற்று.
அறிவு வளர்வதற்கு அறிதல் காரணம் ஒன்றைப்பற்றி அறிவதாயின் அதைப்பற்றிப் பல கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு விடை கூற முயல்வதின்றியமையாதது. ஒன்றை உள்ளவாறு கண்ணாரக் கண்டும் அது இதுதானா அன்றி வேறொன்றா எனவெல்லாம் கேள்விகளை எழுப்பத் தொடங்கினால் தான் அதைப்பற்றிய அறிவு விருத்தியடையும். அது, இதுதான் என்ற தெளிவும் உரியவாறு ஏற்படும். எனவே இவ்வாறு கேள்வி கேட்கும் நிலையில் சந்தேகம் தோன்றுதல் இயற்கை இவ்விதமான சந்தேக மனப்பான்மை அறிவை வளர்க்க உண்மை நிலையை அறிய – அதாவது தத்துவஞானம் தோன்ற அடிகோலுவது என்பர் தத்துவஞானிகள்.
(கைலாசநாதக்குருக்கள், வடமெழி இலக்கிய வரலாறு,)
என்ற கூற்றும்
தத்துவம் என்ற சொல்லுக்கு உண்மை என்பது பொருள். எனவே தத்துவ ஞானம் என்பது உண்மையை அறிவது எனப் பொருள்படும். உண்மை என்பதற்கு, உள்ளது. அதாவது, என்றும் உள்ளது என்பதே கருத்து. நம் உடல் உட்பட நாம் காணும் பொருள்கள்யாவும் என்றும் உள்ளவை அல்ல. என்றுமே உள்ள பொருள் ஏதாவது உண்டா? உண்டாயின், அது எது? அதன் இயல்புகள் எவை என்பன போன்றவற்றை ஆராய்வதே தத்துவ ஞானம் எனக் கூறலாம்.
(லஷ்மணன், கி இந்திய தத்துவ ஞானம், பக்:01)
என்ற கூற்றும், இந்து தத்துவத்தின் தோற்றுவாயை அறிந்து கொள்வதற்கு துணை போகின்றன.
இத்தகு பின்னணியினூடாக இந்திய தத்துவ ஞான வளர்ச்சியானது வேதம், உபநிடதம், வேதாந்தம், தரிசனங்கள், சித்தாந்தம், என்ற வளர் நிலையினைப் பெற்றுச் செல்வதனை நோக்க முடியும்.
'அந்தம்' என்ற சொல்லுக்கு, 'முடிவு' மற்றும் 'குறிக்கோள்' என்று இரண்டு அர்த்தங்கள் உண்டு. வேத நூல்களைப் பிரமாணமாகக் கொண்டு, அவை காட்டும் முடிவை ஏற்பது, வேதாந்தம் (வேத அந்தம்- வேதாந்தம்)
மேற்படி, வேதாந்த தத்துவ ஞான விருத்தியில் அத்வைதம் ஆற்றிய பணி அளவிடற்கரியது. சுருங்கச் சொல்லின் இந்திய தத்துவத்தின் ஆணிவேர் அத்வைதம் எனலாம்.
அத்துவிதம் முழுமுதன்மையான பிரம்மமே உண்மை பிறவெல்லாம் மாயை என்று வாதிடும் வேதாந்ததரப்பு. அ+த்வைதம் என்றால் இரண்டின்மை என்று பொருள். இக்கோட்பாட்டின் ஆதிகுரு ஆதிசங்கரர் எட்டாம் நூற்றாண்டில் கேரளத்தில் காலடி என்ற சிற்றூரில் பிறந்தவர். வேதாந்த மரபைச் சேர்ந்த சங்கரர் கௌடபாதர் என்பவரின் மாணவரான கோவிந்தரின் மாணவர். அத்துவிதத்துக்கு அடிப்படைகள் ரிக் வேதம் முதலே உள்ளன. உபநிடதங்களில் அவை கூர்மைப்பட்டன பாதராயணரில் இருந்து தொடங்கி அவரை நிராகரித்து மேலே செல்கிறார். பாதராயணரின் பிரம்ம சூத்திரம் பிரம்மம் தன்னிலிருந்து பிரபஞ்சத்தை உருவாக்குகிறது என்ற கொள்கை கொண்டது. இது வளர்ச்சிநிலை வாதம் (பரிணாமவாதம்) என்று சொல்லபடுகிறது. சங்கரர் அப்படி பிரம்மம் தன்னை இன்னொன்றாக்கினால் பிரம்மத்தின் முழுமுதல்தன்மை குறைவுபடுகிறது என்றார். ஆகவே அவர் பிரம்மம் எவ்விதத்திலும் மாற்றம் அடையாத முழுமுதன்மை என்று சொல்லி பிரபஞ்சம் அதன் மாயத்தோற்றமே என்று வாதிட்டார். இது உருமயக்கவாதம் (விவர்த்த வாதம்) எனப்படுகிறது. இதுவே பிரம்ம சூத்திரத்துக்கும் அத்வைதத்துக்கும் இடையே உள்ள முக்கியமான வேறுபாடாகும்.சங்கரர் சொல்வதென்ன என்ற வினாவுக்கு அவரது சில அடிப்படைசொற்றொடர்களை முன்வைப்பதே சிறந்த வழியாகும். ஏனெனில் சங்கரவேதாந்தம் மிகசிக்கலாக பற்பல கோணங்களில் விளக்கப்பட்டுள்ளது. அவையனைத்தும் இணைந்த ஒன்றே இன்றைய அத்துவிதம்.
‘பிரம்மமே உண்மை. பிரபஞ்சம் பொய். உயிர் பிரம்மம். வேறு ஒன்றுமில்லை‘
[ப்ரம்ம சத்ய : ஜகன் மித்ய: ஜீவோ ப்ரம்மைவ நாபர:]
விவேக சூடாமணியில் சங்கரர் சொல்லும் விளக்கம் மேலும் திட்டவட்டமானது
‘நிரந்தரமானவையும் அழியக்கூடியவையுமான பொருட்களை வேறுபடுத்திக் கொண்டு பிரம்மம் மட்டுமே உண்மை என்றும் உலகம் மாயையே என்றும் அறிக”
அத்வைதத்தின் நான்கு அடிப்படைக்கொள்கைகளாவன,
1. என்றும் நிலைத்திருக்கும் பொருள் ஒன்றே ஒன்றுதான். அதுதான் ‘ஸத்’ என்றும், (பரப்-பிரும்மம்) அல்லது பரமாத்மா என்றும் அழைக்கப்படுகிறது. அதைத்தவிர வேறு எதுவும் மெய்ப்பொருளல்ல.
2. பிரும்மம் என்பது பெயர் உருவம் ஆகிய எந்த குணங்களும் அற்றது. அதனால் அதை நிர்க்குணப்பிரும்மம் என்று சொல்லி, நாம் மனதால் நினைக்கக்கூடிய குணங்களுடன் சேர்ந்த கடவுள் என்ற பரம்பொருளை ஸகுணப்-பிரும்மம் என்றும் வேறுபடுத்தவேண்டும்.
3. அனைத்துயிர்களுக்கும் உயிருக்குயிராகவும் அறிவுக்கறிவாகவும் இருக்கும் ஜீவாத்மா, வெறும் தோற்றமான அகில உலகிற்கும் அடிப்படை மெய்ப்பொருளாக இருக்கும் பரமாத்மா, ஆகிய இரண்டும் இரண்டல்ல, ஒன்றே.
4. உபநிடதங்கள் மெய்ப்பொருளை குணங்களுள்ளதாக விவரிக்கும்போது அதை இடைநிலை விளக்கங்களாகவும், குணங்களற்றதாக விவரிக்கும்போது அதை கடைநிலை விளக்கமாகவும் கொள்ளவேண்டும்.
இதுவரை பொதுவாக அத்வைதம் என்ற சொற் பொருள் பற்றி விவாதித்தோம் இனி, அத்வைதம் கூறும் பிரம்மம் பற்றி விளக்க முற்படும் போது, பிரம்மம் என்ற சொல்லின் பொருளினையும், அச்சொல் தத்துவ ஞான உலகில் எங்ஙணம் பயிலப் பட்டது. என்பதனையும் ஆழ்ந்து சிந்தித்தல் அவசியமாகின்றது.
'ப்ருஹம்' என்ற மூலச் சொல்லிலிருந்து வந்தது தான் பிரம்மம். 'ப்ருஹம்' என்றால், "வளருவது, விரிவடைவது, வளரச் செய்வது, ஊக்கமளிப்பது" என்று பொருள். "ப்ருஹதி இதி பிரம்மன்" – அதாவது, 'எது வளரச் செய்கிறதோ அது பிரம்மன்'.
பிரமம் என்பதற்குப் பல விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. எமக்கு எட்டியுள்ள நூல்களை எடுத்து நோக்குவோமேயானால் இதன் தொடக்கநிலை இருக்குவேதத்தில் இருக்கின்றதைக் காணலாம். மேலும்பிரமம் என்பது வேதம், தத்துவம், தவம் என்னும் கருத்துக்களை உடையது என நிகண்டு கூறும். வேதங்களில் முக்கியமாக இருக்கு வேதத்தில் வரும் இச்சொல் முதலில் சூக்தத்தையும், பின் வேதத்தையும் குறித்தது. பின்னர் இது பிராமணத்தையும், பிரணவத்தையும் குறிக்கலாயிற்று. இருக்கு வேதம் குறிக்கும் பிரமம் என்பது மந்திரம் எனக்கொள்ளப்படும் பாட்டுக்களையே சுட்டுகின்றது. இப்பாட்டுக்கள் தாம் வழிபடுதற்குப் பயன்படும் தோத்திரங்கள். இவை மந்திர சக்தி வாய்ந்தவை. எனவே இவற்றைக் கருவியாகக் கொண்டு வழிபடுபவர்கள் தெய்வங்களைத் தம்வயப்படுத்தித் தாம் வேண்டுவதை அடைய முற்படுவர். நாளடைவில் இம்மந்திரங்கள் தொகுதிகளாக்கப்பட்டன. இத்தொகுதிகள் ஒன்று சேர்க்கப்பட வேதம் உருவாயிற்று. இதே ‘திரயீவித்யா’ என்பது. ஈற்றில் இது பிரமம் எனப் பெயர் பெற்றது. வேதம், பிரமம் எனும் இவ்விருபெயர்களும் இதன் தெய்வத் தன்மையை உணர்த்துகின்றன. மேலும், வேதங்களிற் கூறப்படும் யாகமும் மனிதன் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட தெய்விக ஆற்றலையே குறிப்பது. வேத நெறி நிற்றலால் இவ்வகை ஆற்றலை ஒருவர் அடையலாம். வேதநெறி நிற்கவழி வகுப்பவை வேட்கும் வகையை அறிவுறுத்தும் பிராமணங்கள். இவ்வுயரிய அறிவாகிய வேதமே முதல் முதற்றோன்றிய பிரமம் எனவும், இதுதான் தோற்றம் அனைத்துக்கும் தோற்றுவாயாய் உள்ளது எனவும், இதை அடுத்துத் தோன்றியனவே படைத்தல் தெய்வமாகிய பிரமா என்னும் சுயம்புவைப் பற்றிய கருத்துக்கள் எனவும்கூறப்படும். இவ்வாறு பிரமம் என்னுஞ் சொல் மந்திரங்களை முதன் முதலிலும், மந்திரங்களின் தொகுதியான வேதத்தை அதன் பின்னரும், அங்கு கூறப்படும் யாகங்களையும், அவற்றின் தொடர்பு உடையவர்களையும். அவற்றினால் விளையும் சக்தியையும், படிப்படியாகக் குறித்து வந்ததைக் கவனிக்கும் பொழுது, பிரமம் என்னுஞ் சொல் உணர்த்தும் கருத்துக்களின்பல நிலைகள் தெளிவாகின்றன. உபநிடதங்கள் குறிக்கும் பிரமமோ எனின் அது எல்லாவற்றிற்கும் நிலைக்களனாகி எல்லாமாய் ஒரே தனிப் பொருளாய்த் தன்னைவிட வேறொன்றிலதாய் உள்ள பொருள் என்பது தெரிகின்றது.
என்ற கைலாசநாதக்குருக்களின் கருத்து பிரம்மம் என்ற சொல்வழக்கு, தோன்றி வளர்ந்த வாற்றை அறிய நன்கு உதவியுள்ளது எனலாம்.
சங்கர வேதாந்தமான அத்வைதம் போதிக்கும் பிரம்மம் புதிதாகச் சங்கரரால் வரையறுக்கப்பட்டதோ, அல்லது தோற்றுவிக்கப்பட்ட கோட்பாடோ, அல்ல. உபநிடதங்கள் பேசும் பிரமத்தின் திருந்திய வடிவம் எனலாம். உபநிடதங்களில் ரிஷிகளாலும் ஞானிகளாலும் விபரிக்கப்பட்ட அல்லது விவாதிக்கப் பட்ட பிரம்மம் பற்றிய கோட்பாட்டின் ஒரு வடிவத்தையே சங்கரர் பெரிதும் ஏற்றுள்ளார் எனக் கூறலாம்.

உபநிடதங்கள் பிரம்மம் பற்றிய சிந்தனையை ஆன்மா உலகுடன் தொடர்பு படுத்திப் பேசும் போது இரு வேறு தன்மையைப் பின்பற்றுகின்றன.
1) பிரம்மமும் ஆன்மாவும் வேறு வேறு என்னும் தன்மையது.
2) பிரம்மம் ஆன்மா ஒன்றே என்ற தன்மையது.
இவற்றுள் இரண்டாவதனையே சங்கரர் ஏற்றுக் கொள்கின்றார்.
அதாவது “அயம் ஆத்ம பிரம்ம” (இந்த ஆன்மா பிரம்மம்) என்ற ஞாக்ஞவல்கியர் கூற்றும், “தத்துவம் அஸி” (அது நீயே) எனும் உத்தலாகரின் கூற்றையுமே சங்கரர் தம் ஒருமை வாதக் கொள்கைக்கு அடிப்படையாக்கினார்.
எனவே சங்கராச்சாரியாரின் கருத்துப்படி உண்மையில் உள்ள பொருள் ஒன்று தான். உபநிடதங்களில் ஆன்மாவென்றும் பிரம்மம் என்றும் சுட்டப்படுவது எதுவோ அதுவே உள்ள பொருள் அது பூரண ஞானமே சொரூபமானது (ஞான சொரூபம்) வேறு வகையில் சொல்வதாயின் அதன் சுபரூபம் ஞானமாகும். (சொரூப ஞானம்) அது குணங்களற்றது. (நிர்குணம்) அதற்கு விசேட இயல்புகள் எவையும் இல்லை, (நிர் விஷேடம்) பிரம்மம் மாயையாகிய தனது சக்தியோடு இணைந்துள்ளது. மாயையை மூலவித்தை எனவும் குறிக்கலாம். நிர்குண பிரம்மம் மாயை காரணமாக குணங்கள் உடையதாக (சகுணப் பிரம்மம்) தோன்றுகின்றது. இந்நிலையில் பிரம்மம் சகுணப் பிரம்மம், சவிசேடப் பிரம்மம், அபரப் பிரம்மம் என்ற பெயர்களால் வழங்குகின்றது.
சங்கரர் பிரம்மம் பற்றிய கருத்துருவாக்கத்தை வெளிப்படுத்துவதற்கு ஏனைய தத்துவங்கள் தத்துவ வாதிகள் ஆராயும் பிரம்மம், ஆன்மா, உலகு, ஆகிய முப்பொருள்களையே தன் தத்துவ ஆராச்சியிலும் ஈடுபடுத்தி முப்பொருட்களில் “பிரம்மம்’’ மட்டுமே சத்தியமான (சத்து) பொருள் உலகு, ஆன்மா என்பன பிரம்மத்தின் தோற்றமே அன்றி உள்பொருள் அல்ல என்ற முடிவுக்கு வருகின்றார். எனவே சங்கரர்
பிரம்மம் தான் உண்மையான பொருள் இந்த உலகம் ஒரு தோற்றமே. ஒவ்வோர் ஆன்மாவும் பிரம்மம் தான் வேறொன்றுமில்லை என்கின்றார். பிரம்மத்தின் இருமையற்ற நிலை, உலகத்தின் உண்மையற்ற நிலை, பிரம்மத்திலிருந்து ஆன்மா வேறுபாடான நிலை இவையே அத்வைதம் போதிக்கும் உண்மைகள்.
பிரம்மம் உள் பொருள் என்பதனையும் அதன்பரிபூரணத் தன்மையை விளக்கி அதன் தோற்றமே உலகு என்பதைத் தெளிவு படுத்த அவர் கையாண்ட வாதம் விவர்த்த வாதம்.
பாதராஜணர் கூற்றுப் படி பிரம்மமும் உள் பொருள் உலகமும் உள்பொருள். பிரம்மம் தான் உலகாக மாற்றம் அடைந்துள்ளது. பிரம்மம் மாறுவதாகத் தோன்றுவது மட்டும் அல்ல. அது உண்மையாகவே மாறி உலக சிருட்டி நிகழ்கின்றது. இத்தகைய மாற்றம் பரிணாமம் எனப்படும். பால் மாறித்தயிராவது இதற்கு நல்ல உதாரணம். இதிலே காரணமும் உண்மை. காரியமும் உண்மை. பாலும் உண்மை, தயிரும் உண்மை. காரணமாகிய பிரம்மமும் உண்மை. அதிலிருந்து தோன்றும் காரியமாகிய இவ்வுலகமும் உண்மை. பிரம்மம் உண்மையாகவே மாறி உலகமாகின்றது. எனவே, இதனைப் “பிரம்ம பரிணாமவாதம்” என வழங்குவதுமுண்டு.
மேலும் பரிணாமவாதத்துக்கு நேர்மாறாகப் பௌத்தர்களுள் ஒருசாரார், காரணமும் உண்மை அல்ல, காரியமும் உண்மை அல்ல. பிரம்மமும் இல்லை. உலகமும் இல்லை. உண்மையில், உள்ளது ஒன்றும் இல்லையென்று கருத்துப் படும்படி “சூனியவாதம்” என்ற ஒன்றப் பேசுகின்றனர். எனவே, ஒரு புறம் காரணமாகிய பிரம்மம் எவ்வளவு உண்மையோ அவ்வளவு தூரம் காரியமாகிய உலகமும் உண்மை என்னும் பரிணாமவாதம். மறுபுறம் இரண்டுமே உண்மையல்ல என்னும் சூனியவாதம். இடையில் இவையிரண்டையும் மறுக்கும் தேவை சங்கரருக்கு ஏற்படுகிறது.
பிரம்மம் சித்துப் பொருள். அதாவது, அறிவே சொரூபமான பொருள். ஆனால், இவ்வுலகம் சடப்பொருள். இது அறிவுக்கு நேர்மாறான பொருள். அறிவே மயமான ஒன்றிலிருந்து அறிவுக்கு நேர் மறுதலையான ஒன்று தோன்றிற்று என்பது பொருந்தாது. இச்சடவுலகுக்கு மூலமும் ஒரு சடப்பொருள்தான். அதிலிருந்தே பிரம்மம் இவ்வுலகைத் தோற்றுவித்தது எனக் கொண்டால், பிரம்மம் மட்டுமல்ல மூலப்பொருள். பிரம்மத்தோடு போட்டியிடக்கூடிய சிறப்பையுடைய வேறு ஒரு மூலப்பொருளும் உளது. ஆகவே, மூலப்பொருள் ஒன்றல்ல, இரண்டு என்ற நிலைமை ஏற்படுகின்றது. மூலப்பொருள் ஒன்றே என்ற உபநிடதக் கூற்றுக்கு இது விரோதமாகும். இதனால், பிரம்மத்தின் மகிமையும் குறையும். இந்த இரண்டாவது மூலப்பொருள் பிரம்மத்துக்குப் புறம்பான ஒன்றல்ல. பிரம்மத்தினுள் அடங்கிய ஒன்றுதான் அது எனில், அது பிரம்மத்தின் ஒரு பகுதியாதல் வேண்டும். அல்லது பிரம்மம் முழுதுமே அது ஆதல் வேண்டும். இவையிரண்டும் பொருந்தா. பிரம்மத்தின் ஒரு பகுதியே சடவுலகுக்கு மூலப்பொருள் எனில், சித்துப் பொருளாகிய பிரம்மமும் சடப்பொருளைப் போலப் பகுதிகளையுடையது என்ற நிலை ஏற்படுகின்றது. பகுதிகளையுடைய பொருளெதுவும் அழியும். எனவே, பிரம்மமும் அழியும் எனல் வேண்டும். இது பொருந்தாது. பிரம்மம் முழுதுமே உலகுக்கு மூலமாகிய சடப்பொருள் எனக் கொண்டால் பிரம்மம் உலகாக மாறி உலக சிருட்டி ஏற்பட்ட பின், பிரம்மம் என்று எதுவும் இலதாகும். எனவே, இதுவும் பொருந்தாது. எனத் தக்க காரணம் காட்டி மறுத்த சங்கரர், விவர்த்தவாதம். எனும் வாதத்தை முன்வைத்து, பிரம்மமே ஒன்றாயும் பலவாயும் இருக்கின்றது என்பது பொருந்தாது, எனக் கூறி பிரம்மம் தானாயும் ஒன்றாயும் இருப்பதே உண்மை என்கிறார்.
ஒரு பொருள் இன்னொன்றாக மாறாமலிருந்தபடியே மாறிவிட்டதாகக் காணப்படுவதற்கு விவர்த்தவாதம் என்று பெயர். உதாரணமாக கயிறு பாம்பாகக் காணப்படுவதைக் கூறலாம். வேதாந்திகள் அதிகமாக கையாளுவதும் இந்த உவமையையே. கயிறு பாம்பாக உண்மையில் மாறவில்லை. ஆனால், உரு மயக்கம் காரணமாக மாறிவிட்டதாகக் தோன்றுகிறது. அது போலவே, பிரம்மமும் உண்மையில் உலகாக மாறாமலே மாறிவிட்டதாகக் தோன்றுகிறது. இதன்படி காரணம் மட்டுமே உண்மை அக்காரணத்திலிருந்து வரும் காரியம் உண்மையல்ல. காரணமாகிய கயிறு உண்மை. அதிலிருந்து தோன்றிய காரியமாகிய பாம்பு உண்மையல்ல. காரணமாகிய பிரம்மம் உண்மை. அப்பிரம்மத்திலிருந்து தோன்றிய காரியமாகிய உலகம் அவ்வளவு உண்மையல்ல (வெறும் தோற்றமே) என்கிறது விவர்த்த வாதம்.
பிரம்மத்திலிருந்து ஆன்மா வேறுபாடான நிலை பற்றிக் குற்ப்பிடும் போது பிரதிவிம்ப வாதம், அவச்சேத வாதம் ஆகிய இரு வாதங்களை முன் வைக்கின்றார். பிரதி விம்பம் என்பது ஒன்றினது பலவான தோற்றம் எனலாம். அதாவது ஒரு பொருள் பிரதிபலிக்கக் கூடிய மேற்பரப்பில் பட்டுப் பலவாகத் தென்படல். உதாரணமாக வானத்தில் தென்படும் சந்திரன் ஒன்றே ஆனால் அது புவியில் உள்ள பல நீர்நிலைகளில் பட்டுப் பலவாகத் தென்படுகின்றது. அது போன்றே பிரம்மம் மட்டுமே உள்ள பொருள் அது அவித்தை (மாயை) காரணமாக பலதாகத் தென்படுகின்றது. எங்ஙனம் நீர்நிலைகளை நீக்கும் போது சந்திரன் ஒன்றே உள்ள பொருளாகின்றதோ அங்ஙனமே அவித்தை விலகும் போது பிரம்மம் மட்டுமே உள்ள பொருளாகின்றது.
அவச்சேத வாதத்தினுடாகவும் பிரமத்தின் பரிபூரணத் தன்மையினையும், உள் பொருட் தன்மையினையும், பிரம்மத்திலிருந்து ஆன்மா வேறுபாடான நிலையினையும் எடுத்துக் காட்டத் தவறவில்லை. ஒரு பரந்த வெளி பல தடுப்புக்களால் தடுக்கப்பட்டு பலவாகத் தென்படுகின்றது அது போல் உள்ள பொருளான பிரம்மம் அவித்தை (மாயை) காரணமாக பலதாகத் தென்படுகின்றது. எங்ஙனம் தடைகள் நீக்கும் போது வெளி ஒன்றே உள்ள பொருளாகின்றதோ அங்ஙனமே அவித்தை விலகும் போது பிரம்மம் மட்டுமே உள்ள பொருளாகின்றது.
மேலே பிரம்மமே உலகமாகத் தோன்றுகின்றது எனக் குறிப்பிட்டோம். இங்கே பிரம்மமே உயிர்களும் ஆகின்றது எனக் காண்கின்றோம். ஆனால், பிரம்மம் உயிர்கள் ஆவதற்கும், பிரம்மம் உலகம் ஆவதற்கும் வேற்றுமையுண்டு. அதாவது மேலே குறிப்பிட்ட கயிறு பாம்பாகத் தோன்றும் உவமையில், உண்மை தெரிந்ததும் அங்குப் பாம்பு என்னும் பொருளுக்கே இடமில்லை. ஒரு வெண்ணிறப்பூவை ஒரு செந்நிறக் கண்ணாடி வழியாகப் பார்க்கும்போது அப்பூவும் செந்நிறப் பூவாகவே தோன்றுகின்றது. இங்கே உண்மை தெரிந்ததும் பாம்பு இல்லாதது போலப் பூ என்ற பொருளும் இல்லாது போகாது. அதன் ஓர் இயல்பு மட்டுமே இலதாகும். கயிறு பாம்பாகின்றபோது பொருளே மாறுகின்றது. ஆனால், வெண்ணிறப்பூ செந்நிறப்பூ ஆகின்றபோது பொருள் மாறவில்லை. அதன் ஓர் அமிசம் மட்டும் மாறுகின்றது. கயிறு பாம்பாகத் தோன்றும் உவமை பிரம்மம் உலகமாகத தோன்றுவதை விளக்குகின்றது. வெண்ணிறப்பூ செந்நிறப்பூவாகத் தோன்றும் பிரம்மம். சீவனாவதை விளக்குகின்றது. முதல் உவமையில் பொருள் ஒன்று அல்ல. ஆனால், இரண்டாவது உவமையில் பொருள் ஒன்று. இயல்புதான் வித்தியாசம். இதிலிருந்து பிரம்மமும் சீவர்களும் ஒன்றே என்பதும், இயல்பிலேதான் வித்தியாசம் என்பதும் புலனாகும்.
பிரம்மம் உலகு, ஆன்மா வாகத் தோன்றுவதற்கு முறையே மாயை, அவித்தை என்பன காரணம் என்கின்றார்.
சங்கரர் பேசும் மாயையை விளங்கிக்கொண்டால்தான் வேதாந்தத்தை விளங்க முடியும். ஆனால், சங்கரர் மாயை என்ற சொல்லை ஒரேயொரு கருத்தில் மட்டும் வழங்கவில்லை. பல கருத்தில் வழங்குகின்றனர். எல்லையில்லாத ஒன்றை எல்லைப்படுத்துவது, உருவம் இல்லாத ஒன்றை உருவமுடையதாக்குவதுமாகிய தத்துவமே மாயை எனப்படும். பிரம்மம் பூரணமானது. அதன் பூரணத்துவம் குறைவதால் ஏற்படும் விளைவே இவ்வுலகமும் உயிர்களும். பூரணமான பிரம்மத்தின் பூரணத்துவத்தைக் குறைக்கும் தத்துவமே மாயை. இது பிரம்மத்தோடு சேர்ந்ததோ அல்லது பிரம்மத்துக்குப் புறம்பானதா என்ற வினாக்களுக்கு விடை கூறுவது அரிது. மாயை பிரம்மத்துக்கு வேறானது என்பது பொருந்தாது. பிரம்மத்துக்கு வேறானது அல்ல என்பதும் பொருந்தாது. ஆனால், பிரம்மம் பரிபூரணமான நிலையில் மாயைக்கு இடமில்லை. பிரம்மம் பரிபூரணத்துவம் குறையத் தொடங்கும் நிலையிலேதான் மாயை இடம் பெறுகின்றது. மேலே கூறியபடி பிரம்மம் தன் பூரணத்துவத்திலே குறைவதற்கு இம்மாயைதான் காரணம். பிரம்மம் தனது நிறைவு குறையத் தொடங்கும் இந்த நிலையைத்தான் வேதாந்திகள் ஈசுவரன் என வழங்குகின்றனர். எனவே, வேதாந்தத்திலே பிரம்மத்துக்கு இரு நிலைகள் பேசப்படுகின்றன. ஒன்று, மாயையோடு சேர்ந்த நிலை. மற்றது மாயையோடு சேராத நிலை. மாயையோடு சேர்ந்த பிரம்மத்துக்குத்தான் ஈசுவரன் என்று பெயர். மாயையோடு சேராத நிலையே உயர்ந்தது. அதுவே குணங்கள் யாவும் கடந்த நிலை. அதனாலேதான் அந்த நிலையை வேதாந்திகள் நிர்க்குணப் பிரம்மம் என்கின்றனர். நிர்-குணம் என்றால் குணங்கள் இல்லாதது என்று பொருள். பிரம்மம் குணங்களைக் கடந்த இந்த உயர்ந்த நிலையிலிருந்து ஒருபடி கீழே இறங்கிக் குணங்களோடு சேர்கின்றது. இந்நிலையில் அதனைச் சகுணப் பிரம்மம் என்பர். சக-குணம் என்றால் குணங்களோடு கூடியது என்று பொருள். சகுணப் பிரம்மந்தான் ஈசுவரன். எனவே, வேதாந்தத்திலே ஈசுவரனுக்கு மிக உயர்ந்த இடம் கொடுக்கப்படவில்லை என்பது புலனாகின்றது.

மாயை என்பதை வேதாந்திகள் அனுபவமாகக் கொள்வர். இது பிரமத்தைப் போல சத்துப் பொருளும் அல்ல. முயற் கொம்பு, ஆகாயத்தாமரை போன்று அசத்துமல்ல. அது “சதசத் விலஷணம்” எனப்படும். மாயை என்பது உள்ளது மல்ல இல்லாததும் அல்ல அது ஓர் அநிர்வசனியம்.
அநிர்வசனியம் என்பது அ+நிர்வசனியம் எனப் பிரித்து, உள்ளதும் அல்ல, இல்லாததும் அல்ல எனப் பொருள் கொள்ளப் படுகின்றது.
ஈஸ்வரனின் சக்தி என்ற அர்த்தத்திலும் மாயை என்ற சொல் வழங்குகின்றது. இந்த மாயைக்கு இரண்டு இயல்புகள் உண்டு.
1)உள்ளதை மறைக்கும் இயல்பு.
2)இல்லாததைத் தோற்றுவிக்கும் இயல்பு.
உள்ளதை மறைக்குமியல்பு ஆவரணம் எனப்படும். இல்லாததைத் தோற்றுவிக்குமியல்பு விஷேபம் எனப்படும். மாயை ஆவரண சக்தியினால் மெய்ப்பொருளாகிய பிரம்மத்த மறைக்கின்றது. விஷேப சக்தியினால் உலகத்தைத் தோற்றுவிக்கின்றது. பிரம்மம் ஆன்மாவாக தோன்றுவதற்கு அவித்தை காரணம் என்பர் சங்கரர். வித்தை என்பது அறிவு என்னும் தன்மையால், அ+வித்தை என்பதற்கு அறிவு அற்ற தன்மை (அறியாமை) எனப் பொருள் கற்பிக்கப் படுகின்றது. மாயை என்பதும் அவித்தை என்பதும் அடிப்படையில் பிரமத்தின் தோற்றத்தை மாற்றுகின்றது. எனினும், அவற்றுக்கிடையில் வேறுபாடு உண்டு. தொகுதியாயிருக்கும்போது மாயை என்ற பெயரையும், அதே மாயை பிரிந்து ஒவ்வொரு ஆன்மாவையும் பாதிக்கும்போது அவித்தை என்ற பெயரையும் பெறுகின்றது மாயை ஈசுவரன் தோன்றக் காரணம். அவித்தை ஆன்மா தோன்றக் காரணம். எனினும் மாயை ஈசுவரனைப் பாதிப்பதில்லை. ஆனால், அவித்தை ஆன்மாகளைப் பாதிக்கின்றது. இது இவற்றுக்கிடையேயுள்ள மற்றொரு வேற்றுமை.
இவ்வாறாகச் சங்கரர் தன் அத்வைதக் கோட்பாட்டில் ப்ரம்ம சத்ய : ஜகன் மித்ய: எனும் ஒப்பற்ற உண்மையினைத் தெளிவு படுத்தி உள்ளார் எனலாம்.







01) கைலாசநாதக்குருக்கள், கா. “வடமொழி இலக்கிய வரலாறு”, நர்மதா வெளியீடு, சென்னை, 1981.
02) கைலாசநாதக்குருக்கள், கா. “இந்துப் பண்பாடு சில சிந்தனைகள்”, தமிழியல், சென்னை, 1986, பக் 17.
03) கோபாலகிருஷ்ணஐயர்,ப. “இந்துசமயம் காட்டும் ஆன்மீக வாழ்வு” ஷேஸ்திர (வயல்) விநாயகர் ஆலயம், முன்னேஸ்வரம், சிலாபம், இலங்கை.
04) லஷ்மணன், கி. “இந்திய தத்துவ ஞானம்”, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை,
05) ஹிரியண்ணா “இந்திய மெய்யியல்”, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.

06) மகாதேவன்,ரி,எம்,பி. “இந்து சமயத் தத்துவம்”, குமரன் புத்தக இல்லம் சென்னை,2000

07) கந்தசாமி, சோ.ந, “இந்திய தத்துவக் களஞ்சியம்”, மெய்பப்பன் பதிப்பகம், சிதம்பரம், (2004).

08) இராசமாணிக்கம்,ச. “ஆதிசங்கரர் அருளிய அத்வைத தத்துவம்”
crhj;Jiz E}y;fs;.

2 கருத்துகள்: