வியாழன், 24 ஜூன், 2010

வேதாந்திகளின் வாழ்வும் சாதனைகளும்.

இந்து மதம் தன் இன்றைய நிலையைக் காலம் தோறும் தோன்றிய ஞானிகள், தத்துவ வாதிகள், குரவர்கள், ஆச்சாரியர்கள் போன்றோரின் அனுபவத்தினால் அடைந்துள்ள தெனலாம். அவ் வகையில் குரு என்பதன் பொருள் விளக்கத்தை நோக்கி, ஆச்சாரியாருக்கும் குரவருக்குமான பொருட் தொடர்பைக் கிரகித்து, தத்துவ ஆசாரியர்களில் மூவகை வேதாந்திகளின் வரலாற்றையும் சாதனைகளையும் கிரகிப்போம்.


“குரு பிரம்மா குரு விஷ்ணோ,
குரு தேவோ மஹேஸ்வரஹா,
குரு சாக்ஷாத் பரப்ரும்மம்
குரவே நமஹா! ”

குருவானவர் அனைத்துக்கும் மேலானவர், அவரே பிரம்மா, அவரே விஷ்ணு, அவரே மஹேஸ்வரன், மேலும் அந்தக் குருவே சாக்ஷாத் பரப்ரம்மம் என்று கூறும் மேற்கண்ட ஸ்லோகத்தை அறியாதோர் இருக்க முடியாது. அப்படிப் பட்ட குருவானவர் வயதானவராகவோ, சகலமும் கற்று அறிந்தவராகவோ இருத்தல் வேண்டும் என்பது இல்லை. வயதிலே சிறியவராய்க் கூட இருக்கலாம், இவர் சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்தாகவேண்டும் என்பதாய்க் கட்டாயம் ஏதும் இல்லை. தன்னுள்ளே தன்னை அறிந்தவராய் இவர் இருப்பதாலேயே இவரைக் குருவாய் ஏற்றிருப்பார்கள். உபதேசமும் செய்யவேண்டும் என்பதும் இவரிடம் எதிர்பார்க்கவேண்டியது இல்லை. இவரைப் பற்றிய மஹிமை நன்கு தெரிந்தவர்களும், அறிந்தவர்களுமே இவரைக் குருவாக ஏற்பார்கள். அப்படியான குருவானவர் பலரும் இருந்தாலும் ஆதிகுரு என்று அனைவராலும் சொல்லப் படுபவர் தட்சிணாமூர்த்தியே ஆவார். வயதில் மிக இளைஞன் ஆன இவர் வாய் திறந்து ஏதும் பேசவில்லை. தன் கைச் சின்முத்திரை ஒன்றே தன் சீடர்களுக்கு, அதாவது தன்னைக் குருவாய் வரித்தவர்களுக்கு அவர் சொல்லும் ஒரே போதனை! இவரைக் குருவாய் வரித்தவர்களோ, வயது முதிர்ந்த ரிஷிகள். அவர்கள் இவரிடம் பாடம் ஏதும் கேட்கவில்லை, இவரும் சொல்லவில்லை. மெளனமே மொழியாக அனைத்தும் அறியப் பட்டது, உணரப் பட்டது. குருவானவர் இவரே. எனினும் குரு பேசவும் செய்யலாம், அதே சமயம் உபதேசமும் செய்யலாம், அது சீடர்களின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தே அமையும். நம்முடைய மனத்தின் இருளைப் போக்கி ஆத்ம ஞானத்தை அறியச் செய்பவரே குரு என்று சொல்லவேண்டும்.

ஆனால் ஆச்சாரியர் என்பவர் வேறு. அவர் தாம் அனைத்தும் அறிந்தவராய் இருந்தாலும், வாழ்க்கை நியதிக்கு ஏற்ப, வாழ்க்கையின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, அதன்படி நல்லொழுக்கங்களைக் கடைப்பிடித்துக் கொண்டு, நல்லுபதேசங்களைச் சீடர்களுக்கு உபதேசித்துக் கொண்டு இருப்பார். தான் சிஷ்யர்களுக்குப் போதிக்கும் அதே வழிமுறைகளைத் தானும் ஏற்கெனவே பின்பற்றி வாழ்ந்து கொண்டிருப்பவரே ஆச்சாரியர் என்பார்கள். சிஷ்யர்களையும் அதே வழிமுறையில் நடக்கச் செய்பவரே ஆச்சாரியர். இந்த முறையில் பார்த்தோமானால் குருவுக்கும், ஆச்சாரியருக்கும் உள்ள வித்தியாசம் புரிந்தாலும், பொதுவாக நாம் அனைவரையும் குரு என்றே அழைக்கின்றோம்.



அதிலும் சில ஆச்சாரியர்கள் அனைத்தையும் கடந்தவர்களாக, ஆத்ம ஞானம் பெற்றவராக, தம்முள் தம்மை உணர்ந்தவராக இருந்தாலும் வெளியில் பார்க்கும்போது அது தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இவர்களைக் குரு எனச் சொல்லலாம். அப்படிப் பட்ட குருக்களிடம் சிஷ்யர்கள் தாங்களாகவே விருப்பத்தின் பேரில் வந்து இணைவார்கள். இந்தக் குரு எதையும் போதிக்காவிட்டாலும் இவரின் அருள் இருந்தாலே போதும் என நினைத்தும் சேர்ந்து கொள்வார்கள். இவர்களையே நாம் "ஸ்வயம் ஆச்சாரியர்கள்" என்று அழைக்கின்றோம். இப்படி குருவாகவும், ஆச்சாரியர்களாகவும் திகழ்ந்தவர்கள், நம் சநாதன தர்மத்தில் பலர் இருந்தாலும், பெரும்புகழ் பெற்றுக் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருந்தவர் மூவர் ஆவார்.
அவர்களில் ஆதிகுரு என்றும், காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பாதயாத்திரையாகவே சென்று தம் கொள்கையான அத்வைதத்தைப் பரப்பியவரும் ஒரு ஆச்சார்யன் எவ்வாறு நடக்கவேண்டுமோ அவ்வாறே நடந்து காட்டியவரும், தனது நான்கு முக்கிய சீடர்கள் மூலம் தனது குரு பரம்பரையை உருவாக்கியவரும் ஆன "ஆதிசங்கரர்" என்பவரே முதல் ஆச்சாரியரும், குருவும் ஆவார். இவரிடம் சிஷ்யர்கள் உபதேசம் பெறச் சேர்ந்தாலும் இவர் குருதான், தம்மில் தம்மை உணர்ந்தவரே, வேதவித்து, ஞானி, சாட்சாத அந்தப் பரப்ரும்ம சொரூபன் ஆன ஈசனின் அம்சம் என்றும் சொல்லப் படுவார். அதே சமயம் "ஸ்வயம் ஆச்சாரியர்" ஆகவும் ஆனார் என்றும் சொல்லப் படுவார். ஒரே சமயம் ஒரு ஞானகுருவாகவும், சிஷ்யர்களுக்குப் போதிக்கும் ஆச்சாரியனாகவும் திகழ்ந்தவர்களில் இவர் முதன்மையானவர்.

அடுத்து வருபவர் "ராமானுஜாச்சாரியார்" இவரின் "விசிஷ்டாத்வைதம்" வழிமுறைகளை இவரும் ஒரு குருவாகவும், அதே சமயம் ஆச்சாரியராகவும் இருந்து உபதேசித்திருக்கின்றார். 74 சீடப் பரம்பரையை இவர் பெற்றிருப்பதாய்ச் சொன்னாலும் வைஷ்ணவ குருபரம்பரையானது இவரிடம் இருந்து பிரிந்து பல்வேறு வழிமுறைகளில் சென்று விட்டதாயும் சில வைஷ்ணவர்களின் திடமான எண்ணம். எனினும் இவரும் ஒரு ஸ்வயம் ஆச்சாரியரே ஆவார். இவரும் தம் சிஷ்யர்களுக்குத் தம் வாழ்க்கையின் மூலமும், தன் ஞானத்தின் மூலமும் பல்வேறு போதனைகளைச் செய்தார். வைணவ பரம்பரையின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவரும் ஆவார்.

அடுத்து வருபவர் மாத்வாசாரியார். இவரின் "த்வைதம்" தத்துவத்தால் வைணவத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரே இன்று மாத்வர்கள் என அழைக்கப் படுகின்றார்கள். இவர் எட்டுமடங்களை ஸ்தாபித்ததாயும் அதன் மூலம் தன் தத்துவங்களை உலகு அறியச் செய்ததாகவும் சொல்லுவார்கள். இவரும் ஒரு ஆச்சாரியராகவும், குருவாகவும் இருந்தே தன் கருத்துக்களைப் பரப்பி வந்திருக்கின்றார். இவரும் ஒரு ஸ்வயம் ஆச்சாரியரே ஆவார். இவர்கள் தவிர, சிருங்கேரி மடப் பீடாதிபதி ஆன வித்யாரண்யர், ஸ்ரீகிருஷ்ண சைதன்யர், மற்றும் வைணவப் பரம்பரையில் வந்த வல்லபாச்சாரியார் போன்றோரையும் சொல்லுவதுண்டு.

ஆதி சங்கரரின் வரலாறும், சாதனைகளும்
ஆதி சங்கரர் தென்னிந்தியாவில் கேரள நாட்டில் காலடி எனும் ஊரில் கி.பி. 788 இல் நம்பூதிப்பிரமண குலத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் சிவகுரு. தாயின் பெயர் விஷிஷ்டா (ஆசிரியாம்பாள்). இவர் தனது நான்காவது வயதில் தந்தையை இழந்தார். சங்கரருக்கு எட்டாவது வயதில் உபநயனம் நடைபெற்றது. பதினாறு வயதிற்குள் சகல கலைகளையும் கற்று ஆறு தரிசனங்களிலும் வல்லவரானார். நர்மதை நதிக்கரையில் கௌடபாதரின் சீடான கோவிந்த பகவத் பாதரைச் சந்தித்து அவருடைய சீடரானார். குரவின் உத்தரவுப்படி வேதாந்த சூத்திரத்திற்கு உரை எழுதினார்.
இமயம் முதல் கன்னியாகுமரிவரை காஷ்மீர் முதல் காமரூபம் வரை கால்நடையாகவே யாத்திரை மேற்கொண்டார். வாதத்தில் எதிரிகளை வென்று தர்மக் கொடியை நிலை நாட்டினார். பூர்வ மீமாம்சை மதத் தலைவரான குமாரிலபட்டரின் சீடரான மண்டன மிரரரையும் அவர் மனைவி உபயபாரதியையும் வாதில் வென்று மண்டன மிசிரரைத் தன் சீடராக்கினார். சுங்கரருடன் எதிர்வாதம் புரிந்தவர்களில் பலர் பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் எல்லோரும் பின்னர் சங்கரரையே பின்பற்றலாயினர். சங்கரர் மறைமுக பௌத்தர் எனவும் அழைக்கப்பட்டார்.
அத்வைத வேதாந்தக் கொள்கைக்கு நிலையான அத்திவாரமிட்டபின் சங்கரர் பாரதத்தின் நான்கு திசைகளிலும் நான்கு மடங்களை நிறுவினார் அவையாவன:-



சங்கரரின் சிஷ்ய பரம்பரை “தசநாமிகம்” எனப் பத்து வகைப்படும். ஆவர்களுக்கு கிரி, பூரி, பாரதி, ஸரஸ்வதி, தீர்த்த ஆச்ரம், வன, அரண்ய, பர்வத. ஸாகர எனப்பட்டப் பெயர்கள் உண்டு.
சங்கரர் இயற்றிய நூல்கள்
சங்கரரின் நூல்கள் பிரகரணக் கிரந்தங்கள் எனப்படும் அவையாவன:
1. விவேகசூடாமணி
2. அபரேஷானுபூதி
3. தட்சணாமூர்த்தி தோத்திரம்
4. ஆனந்தலகரி
5. சொளந்தரியலகரி
6. ஆரியாசதகம்
7. பஜகோவிந்தம்
8. விவேக சூடாமணி
9. உபதேச சாயஸ்ரி
10. சிவானந்தலகரி
இவற்றுடன் அன்ன பூர்ணாஸ் தோத்திரம், சிவநாமவளி. லக்ஷ்மி நரசிம்மஸ்தோத்திரம், காலபைரவ அஷ்டகம், மநீஷா பஞ்சகம், மாத்ருகா பஞ்சகம், சுப்பிரமணிய புஜங்கம், கனகநாஸ்தவம் வேதசார சிவஸ்தம், ஆத்ம போதம், விஷ்ணுசகஸ்ரநாம பாஷியம், உபதேசஸாஹஸ் ரீ, ஹஸ்தமலகிய பாஷ்யம் என்பன போன்றவற்றையும் எழுதியுள்ளார்.
சங்கரர் இயற்றிய உரைகளாக ஈச, கேன, கட, பிரஸ்ன, முண்டக, மாண்டூக்ய, ஜதரேய, தைத்திரீய, பிருகதாரணியக சாந்தோக்கிய ஆகிய தசோபநிடதங்களுடன் பிரம்ம சூத்திரம், பகவத்கீதை என்பவற்றிற்கும் உரை எழுதியுள்ளார்.
சங்கரர் ஆற்றிய அற்புதங்களாக
லட்சுமி தேவியை நோக்கி கனனதாராஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக்கனி மழை பொழியச் செய்தமை.
ஊமைச் சிறுவனைப் பேசச் செய்தமை.
பூர்ணா நதியைத் திசைமாறி ஓடச் செய்தமை.
ஓர் இளைஞனின் தொழு நோயைக் குணப்படுத்தியமை.
தாய்க்கு விஸ்ணு தரிசனம் கிடைக்கச் செய்தமை.
தாயின் தகனக்கிரியைகளுக்காகத் தனத வலது கையிலிருந்து அக்கினியை உருவாக்கித் தகனக் கிரியைகளை முடித்தமை.
கேதாரத்தில் தனது சீடர்களுக்காக வெந்நீரூற்று உருவாக்கியமை.
சங்கரர் மேற்கொண்ட சமயச் சீர்த்திருத்தங்கள்
சங்கரர் வாழ்ந்த காலத்தில் வைதீக சமயிகளிடையே பல பிரிவுகள் காணப்பட்டன. சமயப்பிரிவுகள் காரணமாக வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்தன. இவற்றை ஒரு வரையறைக்குள் கொண்டு வரவேண்டும் எனும் முயற்சியில் சங்கரர் ஈடுபட்டார். வைதீக சமயத்தை அடிப்படையாகக் கொண்ட சமயங்கள் தோற்றத்தில் வேறுபட்டாலும் கருத்து நிலையில் ஒன்று எனும் பரஸ்பரத் தொடர்பினை நிலை நாட்டினார். இந்து சமய மரபில் சமய நெறிகளின் ஆதாரம் பற்றி முதன்முதலில் சிந்தித்தவர் சங்கரரே எனலாம். இவர் தனது சீர்திருத்தங்களுக்கு உபநிடதங்களையே அடிப்படையாகக் கொண்டது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சமய சீர்திருத்தங்களைத் தனது அத்வைதக் கோட்பாட்டினூடாகவே மேற்கொண்டார்.
இவர் சமயம், சமுதாயம் என்பவற்றை முழுமை நோக்கில் சிந்தித்தவராவார். அறுவகைச் சமயப் பிரிவுகளையும் தோற்றுவித்ததால் இவர் சண்மதப் பிரதிஸ்தாபகர் என அழைக்கப்படுகிறார். சிவன், அம்மன், விஸ்ணு, சுப்பிரமணியர் முதலியோரைப் பற்றி இவர் பாடல்கள் பாடியுள்ளார். இப்பாடல்கள் சமயங்களைக் குறித்துப் பரந்த நோக்கில் பிரதிபலிக்கின்றன எனலாம்.
சங்கரர் அடிப்படையில் ஒரு வைதிக சாத்திர விற்பன்னராகவும், விமர்சகராகவும் விளங்கியவர். இவரது வாழ்க்கையும் சாதனைகளும் எடுத்துக்காட்டவே அமைகின்றன.
இவருக்கு முன்பு வேறு எவரும் அடிப்படை நூல்களை ஆதாரமாக மிக வலிமையோடு வற்புறுத்தவில்லை. வேதமென்பது உபநிடதம் என்றே அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனை அவர் இந்து சமய சிந்தனைகளுக்கும், தத்துவத்திற்கும் கருவூலமாகக் கொண்டார். இவருக்கு வேள்வி, சடங்கு, கிரியைகளில் பிரியமிருந்ததாகக் கருத முடியவில்லை. இவர் தசோபநிடதங்கள் பகவத்கீதை, பிரம்ம சூத்திரம் ஆகிவற்றிற்கு எழுதிய உரைகள் சிறப்பானவை. ஞானமார்க்கமே மேலானது என்பது இவரது கொள்கையாகும்.
சங்கரர் தனது பாண்டித்தியத்தினாலும், வாதத் திறமையினாலும் சமய வாதங்கள் புரிந்து வேதாந்தக் கோட்பாடுகளை விளங்கச் செய்தார். அத்துடன் பிறரையும் ஏற்றுக்கொள்ளச் செய்தார். பௌத்தம் இவரது கோட்பாட்டாலும் செயற்பாடுகளாலும் பெரிதும் நலிவுற்றது. எனினும் அவருடைய சிந்தனைகள் வைதீகத்தை மட்டும் பின்னணியாகக் கொண்டமையாது தனது கருத்துக்களுக்குப் பயன்படுத்தினார். இரு சமய நெறிகளையும் கடந்த ஒரு பொது நிலையையும் உருவாக்கினார். இந்து சமய தத்துவ நூல்களையும் இவர் தோற்றுவித்தார்.
பாரதகண்டத்தில் இந்து சமயத்தைப் புனருத்தாரணம் செய்தவர் இவரேயாவார். இவர் காலத்தில் மகாயான பௌத்தம் மிகுந்த செல்வாக்கைப் பெற்றதோடு வட இந்தியாவில் சில பகுதிகளில் சமணமும் மேலோங்கி இருந்தது. பொது வழக்கில் பௌத்தம், இந்து சமயம் என்பன பரஸ்பர செல்வாக்கினால் கலப்புறத் தொடங்கிய போதும் பிரச்சார அடிப்படையில் தரகாறுகள் கூர்மை பெற்றன. பௌத்தர்களின் சூனிய வாதக் கோட்பாட்டை எதிர்கொள்வதும் மறுப்பதும் சங்கரரின் பொறுப்பாக இருந்தது. இந்தச் சூழ்நிலையில் தான் பிரமத்தின் நிலைபேறான தன்மையைப் புதிய வழியில் வலியுறுத்தினார்.
இவர் தமது சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்புவதற்குப் பாரதத்தின் பல பகுதிகளுக்கும் யாத்திரை செய்து புறச்சமய வாதிகளை வாதில் வென்று மடங்களை அமைத்தார்.

இராமனுஜரின் வாழ்வும் பணிகளும்
வைணவ சமய வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் உதவியவர்கள் என்ற வகையில் ஆழ்வார்களும், ஆச்சாரியார்களும் முக்கியம் பெறுகின்றனர். இவர்களுள் ஆச்சாரியார்களின் வாழ்வும் பணிகளும் ஆழ்ந்து நோக்குவதற்குரியதாகும். ஸ்ரீமத்நாதமுனிவர், உய்யக்கொண்டார், நாமக்கல் நம்பி, ஆளவந்தார், பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, இராமனுஜர் போன்ற பல ஆச்சாரியார்கள் வாழ்ந்துள்ளனர். இவர்களுள் இராமனுஜரின் வாழ்வும் பணிகளும் வைணவ சமய வரலாற்றில் என்றும் போற்றக் கூடியனவாக அமைந்துள்ளன.
வைணவ சமய தத்துவ உலகில் நீண்ட காலம் வாழ்ந்து உயர்ந்த சாதனை படைத்த இராமானுஜர் கி.பி 1017ம் ஆண்டு சித்திரைத் திருவாதிரையில் காஞ்சியை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஆசுரிகேசவருக்கும் காந்திமதி அம்மையாருக்கும் அருமை மகனாக அவதரித்தார். இவரை ஆதிசேடனின் அவதாரமாகக் கருதி இவரின் தாய்மாமன் இவருக்கு தமிழ்மொழியில் இலட்சுமணன் எனவும் வடமொழியில் இராமானுஜர் எனவும் பெயர் சூட்டினார். இளையாழ்வார், எம்பெருமானார், லக்மாணமுனி, யதிராஜர், ஸ்ரீபாஸ்யக்காரர் உடையவர் போன்ற பெயர்களால் இவரை அழைப்பர். கருவிலேயே திருவுடையவரான இவர் ஆழ்ந்த சமய பக்தியையும் தத்துவப் பயிற்சியையும் பெற்றதோடு இறை வாழ்வையும், தேடல்களையும் மேற்கொண்டார். இவரின் முதல்குரு யாதவப்பிரகாசர் உபநிடதத்திற்கு அவர் அளித்த விளக்கம் திருப்தியளிக்காமையால் வேறு பல குருமார்களை நாடினார் பெரியநம்பியிடம் வைணவ சித்தாந்தங்களைக் கற்றார். திருக்கோட்டியூர் நம்பியிடம் “ஓம் நமோ நாராயணநம” என்ற மந்திரதத்தைப் பெற்றுத் திருமாலை நம்பியிடம் இராமாயணம் கற்றார். மேலும் திருக்கச்சி நம்பி திருமலையாண்டான். திருவரங்கப் பெரமாள் அரையர் போன்றோரையும் தனது ஆன்மீகக் குருவாகக் கொண்டார்.
உடல், உள ஆன்மீக நிலையில் பக்குவம் பெற்ற இராமானுஜர் 18வது வயதில் தஞ்சமாம்பாள் என்ற பெண்ணைத் தனது வாழ்க்கைத் துணையாக்கினார். தனது ஆன்மீக வாழ்வுக்கு இல்லற வாழ்வு தடையாக இருப்பதை உணர்ந்து துறவற வாழ்வைக் கடைப்பிடித்தார். இராமானுஜர் விஸ்ணுவிடத்தில் ஆழ்ந்த அன்பு கொண்டு ஆன்மீக வாழ்வை மேற்கொண்டு வரும் காலத்தில் தலை சிறந்த வைணவ அறிஞரும் திருவரங்கத் தலைவருமான ஆழவந்தார் தமது இறுதிக் காலத்தில் இராமானுஜரை அழைத்து வந்து பட்டம் சூட்டி மகிழத் தமது சீடர்களை அனுப்பினார். இராமானுஜர் வந்து சேருவதற்கு முன்னர் ஆழவந்தாரின் ஆவி பிரிந்துவிட்டது. ஆழவந்தாரின் வலது கை மூன்று விரல்கள் மடக்கி இருந்தன. ஆழவந்தாரின் மூன்று நிறைவேறாத ஆசைகளை அவை குறிப்பதாகச் சீடர்கள் கூறினர். அவையாவன:

1) பிரம்ம சூத்திரத்திற்கு வைணவ முறையில் விளக்கவுரை எழுதுதல்.
2) திருவாய் மொழிக்கு விளக்கவுரை எழுதுதல்.
3) விஸ்ணு புராணத்தைத் தொகுத்து உரை கூறுதலும் அதன் புகழை நிலை . நிறுத்தலும்.

இராமானுஜர் “உன் குறை தீர்ப்பேன்” என்றதும் விரல்கள் நிமிர்ந்தன என்று கூறப்படுகின்றது. மேலும் இராமானுஜரின் இறை பணியையும் சமூகப்பணியையும் தொடர முற்பட்டபோது சோழப்பேரரசர்கள் உள்ளிட்ட பலரின் எதிர்ப்புக்கும் உட்பட்டார். எனினும் தமது அன்பாலும் இறை ஞானத்தாலும், சமூகப் பணியாலும் அனைவரையும் வென்று 120 ஆண்டுகள் வாழ்ந்து, வைணவ சமய வரலாற்றில் சிறந்த சமய வாதியாக தத்துவ வாதியாக சீர்திருத்த வாதியாக சிறப்புப் பெற்று விளங்குகின்றார் எனலாம்.

இராமானுஜரின் வைணவப் பணிகள்
இஸ்லாமிய ஆட்சிக் காலத்திற்கு முன்பு சைவநெறி முதன்மை பெற்றுக் காணப்பட்டமை கி.பி 13ம் நூற்றாண்டினைத் தொடர்ந்து இந்துசமயத்தின் வைணவ சமய மறுமலர்ச்சி ஏற்பட்டது. இம் மறுமலர்ச்சியின் முன்னோடி இராமானுஜர் ஆவார். வைணவ சம்பிரதாயங்களுக்கு புத்துயிர் கொடுத்தவர் என்ற விகையில் இராமானுஜருக்கு வைணவ சமயத்தில் முக்கிய இடமுண்டு இவரின் சிந்தனைகளும் செயல்களும் வைணவ சமயத்தைச் சீர்படுத்தி அதன் மறுமலர்ச்சிக்கு உதவியது எனலாம். வைணவ சமயத்தின் நிலைக்களமாக விளங்குகின்ற ஆலயங்களின் வழிபாட்டு முறைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தினார். பல இடங்களுக்கும் யாத்திரை சென்றார். பக்தி மகிமைகளை விளக்கினார். சாதி ஏற்றத்தாழ்வைக் களைய முயன்றார் பலரையும் மதம் மாற்றினார். வைணவ நூல்களை உருவாக்கினார் தத்துவக் கொள்கைகளை உருவாக்கினார்.
திருவரங்க ஆலயத்தில் அவர் மேற்கொண்ட பல்வேறு செயற்பாடுகள் ஆலயங்களில் அவர் மேற்கொண்ட சீர்திருத்தப் பணிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. எனலாம். மேலும் தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியா வரை பல இடங்களுக்கும் யாத்திரை மேற்கொண்டார். திருவரங்கம், திருப்பதி, திருவானந்தபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், துவாரகை, கர்நாடகம், கேரளம், ஆந்திரா போன்ற இடங்கள் குறிப்பிடத்தக்கவை. தான் சென்ற இடங்களில் மடங்களை நிறுவி வைணவ பக்தி நெறியை வளர்த்திருந்தார். திருவரங்கம், இராமானுஜமடம், திருநாராயணபுரம், ஜதிராஜமடம் என்பவை குறிப்பிடத்தக்கன.
விஸ்ணு பக்தி மகிமைகளைத் தான் சென்ற இடமெங்கும் பிரச்சாரம் செய்தார். ஆழ்வார்களின் பாசுரங்களை மூலமாக கொண்டே தனது பக்திச் செயற்பாட்டை மேற்கொண்டார். குறிப்பாக நம்மாழ்வாரின் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். பிரபக்திக்கு முதன்மையான இடம் அளித்தார். “எம்மை முற்றாகச் சரணடைவதே முத்திக்குரிய ஒரே வழியாகும். வேறு தனிமுயற்ச்சிகள் வேண்டியதில்லை” என விஸ்ணு தன்னிடம் கூறியதாகக் குறிப்பிடுகின்றார். மகாபுராணங்களை ஞான குரவர்களிலும் மேலானதாக கொண்டார். அவற்றின் பக்திச் சிந்தனைகளைப் பரப்பினார். வைணவம் என்றால் “அது பக்தி மதம்” என்று கூறுமளவிற்கு அவரின் பக்திச் செயற்ப்பாடு அமைந்தது எனலாம்.
பக்தி நிலையில் சாதி வேறுபாடுகள் அர்த்தமற்றவை என்ற சிந்தனை உடைய இராமானுஜர் “ஒரே குலம் ஒரே சமுதாயம்” என்ற மனப்பாங்கை மக்களிடம் ஏற்படுத்தினார்.

1) விருந்தினரை உபசரிப்பதில் சாதிப்பாகுபாடு காட்டிய மனைவியைப் புறக்கணித்தமை.
2) தன்னை விடத் தாழ்ந்த சாதியைக் குருவாக ஏற்றமை. (பெரியநம்பியிடம் தீட்சை பெறுதல்)
3) தாழ்த்தப்பட்ட சாதியினரை மேல்கோட்டை திருநாராயணபுரம் கோயிலினுள் அழைத்துச் சென்றமை
4) கீழ்க்குலத்தவரைத் “திருக்குலத்தவர்” என அழைத்தமை கூரத்தாழ்வானின் மகனுக்கு “பராசுரப்பட்டர்” என்ற பெயர் சூட்டி ஆன்ம ஞானம் போதித்து மகாவித்துவானாக்கியமை.
5) “எவருக்கும் சொல்லக்கூடாது பரம ரகசியம்” என்று திருக்கோட்டியூர் நம்பி சொன்ன “ஓம் நாரயண நம” என்ற மகா மந்திரத்தை திருக்கோட்டியூர் கோபுரத்தில் ஏறி நின்று எல்லோருக்கும் கூறியமை போன்ற சம்பவங்கள் அவரின் சமத்துவ நோக்கைக் காட்டுகின்றது.

வைணவ சம்பிரதாயங்கள், பக்தி மகிமைகளை வடநாடு வரை வளர்த்துச் சென்றவர். இவரின் வழிகாட்டலில் தோன்றிய இராமனந்தா, கபிர்தாசர், துளசிதாசர் போன்றோர் வட நாட்டுப் பக்தி நெறியை வளம்படுத்தி முஸ்லிம்களிடமிருந்து வைணவத்தைக் காப்பாற்றினார். இராமானுயரின் வைணவ சமயச் பிரச்சாரம் காரணமாகச் சோழ மன்னர் உள்ளிட்ட பலரும் வைணவத்தை பின்பற்றினர் சமணம், பௌத்தம், சைவம் எனப் பல சமயப் பிரிவினரும் வைணவ ஈடுபாடு கொண்டனர்.

உதாரணம் :
கோய்ச்சால் நாட்டு சமண மன்னன் வைணவத்திற்கு மாறியமை.
திருவரங்கத்தமுதனார் வைணவராக மாறி “இராமானுஜ நூற்றந்தாதி” இயற்றியமை.
உறையூர் நாட்டு மன்னன் அகலங்கனும் அவனின் பரிவாரங்களும் வைணவத்தைப் பின்பற்றியமை.
போன்றவை குறிப்பிடத்தக்கன.
இராமனுஜர் மேற்கொண்ட வைணவப் பணிகளில் திருவரங்க ஆலயத்தில் மேற்க்கொண்ட பணிகள் முதன்மையானதாகும். தனது குருவான ஆளவந்தாரின் அழைப்பை ஏற்று காஞ்சியிலிருந்து திருவரங்கம் வந்து நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். உய்யக் கொண்டார். மாணக்கல் நம்பி ஆளவந்தார் என்போரைத் தொடர்ந்து தனது 33 வது வயதில் திருவரங்க வைணவ ஆசாரி பீடத் தலைவரான இவர் அங்கே பல பணிகளை மேற்கொண்டார். ஆளவந்தாரின் 3 விருப்பங்களையும் நிறைவேற்றுதல் முக்கிய பணியாக இருந்தது. மேலும் “இராமானுஜ முனியே எமது விபூதியையும், லீலா வீபூதியையும் இப்பெரிய கோவிலையும் உம்முடைய உடைமையாக்குகின்றோம். இதைக் கேந்திரமாகக் கொண்டு வைணவத்தின் பெருமையைப் பாரெங்கும் பரப்புவீர்” எனச் ஸ்ரீரங்கப் பெருமானே அர்ச்சகர் உருவில் வந்து கூறியமையும் குறிப்பிடத்தக்கது.

1) திருவரங்கத்திலிருந்து வந்த பழைய வைகாசன அடிப்படையிலான வழிபாட்டு முறைகளை மாற்றி எளிமையான பாஞ்சராத்திர ஆகமமுறையை நடைமுறைப்படுத்தினார்.

2) ஆலயச்சுழலில் காணப்பட்ட சாதி ரீதியான ஏற்றத்தாழ்வை வெறுத்தார். பிராமணரே உயர்ந்த ஆசாரமுடையவர் என்று அங்கே நிலவி வந்த மரபைக் கண்டித்தார். “வேதங்கள் பிராமணர்களுக்குரியது இதனை ஏனையவர்கள் கற்கவோ பொருளுரைக்கவோ கூடாது” என நிலவிவந்த விதியை மாற்றியமைத்தார். திருவரங்கக் கோபுரத்தில் ஏறி நின்று எல்லோரும் கேட்க வேதம் உரைத்தார்.

3) தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தார். நிர்வாகத்தில் இருந்த பலருக்கும் தமிழில் பெயர்களைச் சூட்டினார். ஆழ்வார்களின் தமிழ் மொழிப் பாசுரங்களுக்கு முதன்மை கொடுத்தார். நித்திய வழிபாட்டில் தினமும் திவ்ய பிரபந்தங்களை இசைப்பதற்கு வழிசெய்தார்.

4) வைணவ சமய உண்மைகளை எல்லோரும் அறியும் வகையில் வைணவ சமயப் பிரசங்கத்தை மேற்கொண்டார்.

5) நந்தவனம் அமைத்துச் சரீரத் தொண்டுகளில் ஈடுபட்டார்.

இவ்வாறு பல பணிகளைச் செய்து தனது இறுதிக் காலம் வரை திருவரங்கத்தில் தங்கியிருந்த இராமானுஜர் ஆலயத்தைப் போற்றி நூல்களை உருவாக்கியதாகவும் கூறப்படுகின்றது.

தத்துவக் கொள்கை உருவாக்கம் (வேதாந்த மரபு)
உபநிடத முரண்பாடுகளை போக்கித் தெளிவினை ஏற்படுத்துவதற்காக இராமானுஜரால் முன்வைக்கப்பட்ட தத்துவக் கொள்கை விசிட்டாத்துவைதமாகும். இது சங்கரரின் அத்வைத வேதாந்தக் கொள்கைகளில் கூறப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது வேதாந்த மரபில் தனிக்கென தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. பிரத்தியட்சம், அனுமானம், ஆப்தவாக்கியம் ஆகிய பிரமாணங்களையும் உபநிடதம், பிரமசூததிரம், பகவத்கீதை மற்றும் வைணவ ஆகமங்கள், விஸ்ணு சார்ந்த மகா புராணங்கள், நாலாயிரந் திவ்விய பிரபந்தங்கள் போன்ற பிராமண நூல்களையும் இராமனுஜர் தனது கொள்கை உருவாக்கத்திற்குப் பயன்படுத்தியுள்ளார். பிரமசூத்திரத்திற்கு இராமனுஜரால் வழங்கிய உரை ஸ்ரீபாஷ்யம் எனப்படுகின்றது. இதுவே இவரின் தத்துவக் கொள்கையின் முக்கிய நூலாகும்.

விசிட்டாத்துவைதம் என்பத விசிட்டம் + அத்வைதம் எனப்பிரிந்து அத்வைதத்தை விசேடமாக விளக்க எழுந்த கொள்கை என்ற கருத்தைத் தருகின்றது. அதாவது ஈஸ்வரன், சித், அசித் ஆகிய முப்பொருட்களில் ஈஸ்வரனாகிய விஸ்ணுவே மேலானவர் என்பதனை விளக்கும் கொள்கை இதுவாகும். மேலும் ஈஸ்வரன் சித், அசித் ஆகிய இரண்டையும் தனது உடலாகக் கொண்டு தான் அவற்றிற்கு உயிராக இருந்து அவற்றை இயக்குகின்றான். என்ற சரீர சரீரி சம்மந்தத்தை நிலை நிறுத்துகின்ற கொள்கை இதுவாகும். முப்பொருள் உண்மையை வலியுறுத்துவதால் இதனை “தத்துவத்திரயக்கொள்கை” எனவும் முப்பொருட்களுக்கிடையே இயல்பாகவே வேறுபாடு உண்டு எனினும் அவை ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை என்று இங்கு கூறப்படுவதானால் இதனை “பேதாபேதக்கொள்கை” எனவும் அழைப்பர். இராமானுஜர் தனது தத்துவக் கருத்துக்களை
சரீர சரீரி பாவம் அல்லது அங்க அங்கித் தொடர்பு
அப்பிரத சித்திக் கொள்கை
இருவகைத் தொடர்பு
மூவகைப் பேதங்கள்
பரிணாம வாதம்
போன்ற வாதங்களினூடாக நிறுயுள்ளார். இவ்வாதங்களினூடாக முப்பொருட்களின் உண்மையைக் கூறி அவற்றுக்கிடையேயுள்ள பேத, அபேதங்களை நிலைநிறுத்துவதுடன் விஸ்ணுவுக்கு முதன்மை கொடுத்து அவ் விஸ்ணுவுடன் இரண்றக் கலப்பதே வாழ்வின் இறுதி இலட்சியம் என்பதையும் காட்டியுள்ளார். இராமானுஜரின் இத்தத்துவக் கொள்கை சைவசித்தாந்த தத்துவக் கோட்பாடு வளம்பெறத் துணையாக அமைந்ததென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மடங்கள் உருவாக்கம் (சமய நிறுவனங்கள்)
தென்னாட்டிலிருந்து வட நாடுவரை ஊரூராக ஆன்மீக யாத்திரை மேற்கொண்ட இராமானுஜர் தான் சென்ற இடங்களில் பல சீடர்களை தோற்றுவித்தார். சுதர்சனசூரி, வேங்கடநாதர், ஸ்ரீநிவாசர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இத்தகைய சீடர்களின் துணையுடன் வைணவ சமய தத்துவ வளர்ச்சிக்கு உதவும் மடங்கள் அல்லது பீடங்களை உருவாக்கினார். தமிழகமெங்கும் 70 பீடங்களை உருவாக்கி அவற்றின் மூலம் 700 சந்நியாசிகளைத் தோற்றுவித்து அவர்களை ஊரூராக வலம் வரச் செய்து வைணவ பக்தி நெறியை வளம்படுத்தினார். இவரின் சமய நிறுவனங்களின் செயற்பாட்டால் சமண, பௌத்த மதங்கள் நிலைகுலைந்தன. மேல்கோட்டை, பூரி, பிருந்தாவனம், திருவரங்கம் போன்ற இடங்களில் மடங்கள் அமைந்தன.

திருவரங்கம் - இராமானுஜமடம்
திருநாராயணபுரம் - ஜதிராயமடம்
திருவானந்தபுரம் - இராமானுஜமடம்
பூரி ஜகந்நாதம் - எம்பார்மடம்

போன்ற மடங்களின் பணிகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவையாகும். இம்மடங்களில் இருந்த வைணவ பெரியார்கள் சமண, பௌத்த துறவிகளுடன் வாதங்களை மேற்கொண்டு வைணவ சமய தத்துவ சிந்தனைகளினை நிலைநிறுத்தினார். பலரையும் வைணவத்திற்கு மாற்றினார். பொதுவாக வைணவ பக்தி நெறியை தென்னாட்டிலிருந்து வட நாடு வரை பரப்புவதில் இராமானுஜரால் நிறுவப்பட்ட மடங்கள் முதன்மையாகச் செயற்பட்டன. அத்துடன் சோழர் காலத்திற்குப் பின்னர் வைணவ சமய நிறுவனங்கள் பல தோற்றம் பெறுவதற்கும் இம் மடங்கள் முன்னோடியாக விளங்கின எனலாம்.

நூல்கள் உருவாக்கம்
வைணவ சமயத்தின் வளர்ச்சிக்காக இறுதிக் காலம் வரை செயற்பட்ட இராமானுஜர் வைணவ சமயத்தின் சமய, தத்துவ விடயங்களையும் பல நூல்களாக வெளிப்படுத்தி உள்ளார். பூர்வ ஆச்சாரியர்களின் பிரபந்தங்களிலும் ஆழ்வார்களின் பாசுரங்களிலும் உறுதியான நம்பிக்கை கொண்ட அவர் அவற்றிலிருந்து தான் பெற்ற ஆத்மீக அனுபவங்களை, இறையியல் தத்துவங்களை நூல்களாக உருவாக்கினார்.
தனது குரு நாதரின் விருப்பப்படி பிரம சூத்திரத்திற்கு விளக்கவுரை அல்லது பேருரை செய்தார். அது ஹீபாஷ்யம் எனப்படுகின்றது. கீதையில் மிகுந்த ஈடுபாடு உடைய இவர் கீதா பாஷ்யம் என்ற நூலை உருவாக்கினார்.

வேதாந்த தீபம்
வேதாந்த சங்கிரகம்
வேதாந்த சாரம்
ஹீரங்க கத்யம்
நித்ய திருவாதனப்பாடி
கத்யத் திரயம்
சரணாகதி கத்யம்
ஹீ வைகுண்ட கத்யம்
பவதாந்த தீபம்
போன்ற நூல்களும் இராமனுஜரால் உருவக்கப் பட்டவை ஆகும். ஆழ்வார்களின் பாசுரங்கள் மீது மிகுந்த பக்தி கொண்டவர். ஆழ்வார்களின் பாசுரங்களின் தொகுப்பான நாலாயிர திவ்விய பிரபந்தங்களைத் “தென்னக திராவிட வேதம்” எனப் போற்றுகின்றார்.
மத்துவரின் மத பரிபாலனம்
கி.பி 1238ஆம் ஆண்டு, விளம்பி என்ற பெயருடைய வருடத்தில் 32 லக்ஷணங்களும் கூடிய ஒர் ஆண்-குழந்தை வேதவதி-மத்யகேஹ பட்டர் என்னும் தம்பதியினருக்குப் பிறந்தது. இக்குழந்தைக்கு வாசுதேவன் என்று பெயரிட்டு வளர்த்தனர். குழந்தை சிரிப்பும், விளையாட்டுமாய் வளர்ந்து வந்தான். ஒருநாள் மத்யகேஹ பட்டர் வாங்கியிருந்த கடனை திரும்பக் கேட்டு வந்தான் ஒருவன். அந்த சமயத்தில் மத்யகேஹ பட்டர் ஊரில் இல்லை. கடன்காரனோ கடனை திருப்பி கொடுத்தாலேயொழிய இங்கிருந்து போகமாட்டேன் என்று தொல்லை செய்கிறான். அப்போது 6 வயதே ஆன குழந்தை வாசுதேவன் வேகமாக சமயலறைக்குச் சென்று அங்கிருந்த சில புளியங்கொட்டைகளை தனது சிறுகையில் அள்ளிக் கொண்டுவந்து உனக்கு பணம்தானே வேண்டும் இதோ வாங்கிக் கொள் என்று கடன்காரன் கையில் அளிக்கிறான். புளியங்க்கொட்டைகள் எல்லாம் தங்க காசுகளாக மின்னியதாம். 7 வயதில் குழந்தைக்கு உபநயனம் செய்வித்து குருகுலத்திற்கு அனுப்பினர். குருகுலத்தில் பாடம் பயிலும் சமயத்தில் ஒரு நாள் ஓர் மலைப்பாம்பு வழியில் படுத்திருக்க, வாசுதேவன் தனது காலால் அழுந்தச் செய்தே அந்த பாம்பை கொன்றான்.

இவ்வாறாக ஒருசில அதிசயமான செய்கைகள செய்த வாசுதேவனது கைரேகைகளை பார்த்த ஒரு பெரியவர் திகைப்படைகிறார். பின்னர் அன்னை வேதவதியிடம்
"அம்மா உங்கள் திருக்குமரன் ஓர் அவதார புருஷன். முன்பு வாயுகுமாரனாக ராமயண காலத்திலும், பாண்டவர்களில் பீமனாகவும் இருந்தவர் இவர். இப்பிறவியில் சிறந்த ஞானியாக பாரதம் முழுவதும் ஒளிவிசுவார்"
என்றார். வாசுதேவனுக்கும் தனது 15ஆம் வயதிலேயே சன்யாசியாகும் எண்ணம் வந்தது. ஆனால் பெற்றோர் பாசம் அவரைக் கட்டுப்படுத்த, ஒருநாள் தன் பெற்றோரிடம், "நான் ஒரே மகனாக இருப்பதால் தானே என்னை சன்யாசம் கொள்ள தடுக்கிறீர்கள்?, உங்களுக்கு இன்னொரு மகன் பிறப்பான் அதன் பின் நான் சன்யாசம் ஏற்கிறேன் என்று கூறுகிறார். அது போலவே வேதவதி-மத்யகேஹ பட்டருக்கு இன்னொரு ஆண் மகவு பிறக்கிறது. அப்போது வாசுதேவன் வயது 16. காஷாயம் தரித்து, இல்லத்தை துறந்து உடுப்பி வந்து அச்சுதப்பிரக்ஞர் என்னும் மகானை குருவாக ஏற்கிறார். அனந்தேஸ்வரர் கோவிலில் சன்யாச தீக்ஷை அளித்து பூரணபிரக்ஞர், ஆனந்த தீர்த்தர் என்ற தீக்ஷா நாமம் பெறுகிறார்.

தனது 23ஆம் வயதில் கீதைக்கு பாஷ்யம் எழுதி, அதனை வேதவியாசரிடம் சமர்பணம் செய்வதற்காக பத்ரிநாத் சென்று, பின்னர் ப்ரம்ம சூத்திரத்துக்கும் பாஷ்யம் செய்திருக்கிறார். இவர் கன்னடம், சம்ஸ்கிருதம், தமிழ், இந்தி, உருது, தெலுங்கு, வங்காளி போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சியுடன் இருந்திருக்கிறார். தசபிரகரணங்கள், உபநிஷத் விளக்கங்கள், ரிக்வேத விளக்கம், அனுவியாக்கியானம் என்று 37 நூல்களை எழுதியிருக்கிறார். இவர் கனவிலேயே உடுப்பி கிருஷ்ணன் விக்ரஹம் தான் இருக்கும் இடம் பற்றிக் கூறி, அதனை மீட்கச் செய்து உடுப்பியில் கோவில் கட்டி எழுந்தருளுகிறார். இன்றும் இவர் ஸ்தாபித்த அஷ்ட மடங்களைச் சார்ந்த சன்யாசிகளே இங்கு பூஜை செய்கின்றனர்.


இறைவனிடம் அழியாத அன்பு கொள்வதும், எல்லாரிடமும், எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு காட்டுவதும், தனக்குரிய கடமைகளை பணிவுடன் செய்வதும், பக்தி உள்ளத்துடன் வாழ்வதும், வாழ்கையை நல்ல பணிகள் செய்ய அர்பணிப்பதுமே வாழ்வின் தத்துவம் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார். 'மத்வர்' என்று, அதாவது 'யாராலும் வெல்ல முடியாதவர்' என்று அழைக்கத் தொடங்கினர் சிஷ்யர்கள். இவர் அளித்த ப்ரம்ம ஞான தத்துவமே த்வைதம் எனப்படுகிறது. இவரது கூற்றுப்படி பரமாத்மாவும்-ஜீவாத்மாவும் என்றும் ஐக்கியமாகாது. இவரது தத்துவங்களை பின்பற்றியவர்களை மாத்வர் என்று கூறும் வழக்கம் ஏற்பட்டது. இன்றும் மாத்வர்களுக்கு ஹரியும் வாயுவும் பிரதானம். ஏனென்றால் மாத்வர் ஹரிபக்தியில் சிறந்தவர், அதே சமயத்தில் அவரே வாயுகுமாரன் என்பதால்.


மாத்வர் மற்ற சன்யாசிகள் போல பிருந்தாவனப் பிரவேசம் செய்யவில்லை. 1317ஆம் வருஷம் மாக சுக்லபக்ஷ நவமியில் அனந்தேஸ்வரர் கோவிலில் தனது சிஷ்யர்களுக்கு பாடம் நடத்தும் போது திடீரென அவர் மீது புஷ்பங்களால் விருஷ்டி நடந்து அவரை மூடி ஒரு பூங்குன்று உருவாகிறது. இதை அவரிடம் பாடம் கற்ற மாணவர்கள், கோவிலுக்கு வந்தவர்கள் எல்லாம் பார்க்கிறார்கள். பிறகு புஷ்பங்களை விலக்கிப் பார்த்தால் மத்வரை காணவில்லை. இவர் இன்றும் பத்ரிகாஸ்ரமத்தில் வேதவியாசர் அருகில் அமர்ந்து பாடம் கேட்பதாக நம்பிக்கை. மத்வர் வாழ்ந்த வீடு, கல்வி கற்ற இடம், விளையாடிய இடம் நீராடிய குளம், மலைப்பாம்பு இறந்த இடம் எல்லாம் பாஜகம் என்ற கிராமத்தில் கர்னாடகத்தின் தென் பகுதியில் இருக்கிறது.

இவ்வாறாக மூவகை வேதாந்திகளின் வரலாறுகளும் சாதனைகளும் இன்று வரை இந்து மதத்தைச் சிறப்பிக்கின்றதெனலாம்.





உசாத்துணை நூல்கள்

சந்தானலக்ஷ்மி, “சமயம் வளர்த்த சான்றோர் – ஆதிசங்கரர்”, பழனியப்பா பிரதர்ஸ், திருச்சி, 2006.

மீனாஷி “சமயம் வளர்த்த சான்றோர் – இராமானுஜர்”, பழனியப்பா பிரதர்ஸ் , திருச்சி, 2006.

பட்சிராஜன்.தி “சமயம் வளர்த்த சான்றோர் - வைணவம் வளர்த்த பெரியோர்”, பழனியப்பா பிரதர்ஸ், திருச்சி, 1994.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக